பொன்மனச் செல்வர் பொன்.வல்லிபுரம் ஐயா

Thursday, 03 February 2011 09:40

thinakural

பொன்மனச் செல்வர் பொன்.வல்லிபுரம் ஐயா
Thursday, 03 February 2011 09:40
கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர் : மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முன்னைநாள் அரங்காவலரும் ஓய்வுபெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரியும் சமய, சமூக சேவையில் மிகவும் ஈடுபாடுகொண்டவருமாகிய பொன். வல்லிபுரம் ஐயா இறந்துவிட்டார் என்று செய்தி கேட்டு கலங்காத உள்ளங்களே இல்லை என்று சொல்லவேண்டும். இவர் அநேகமாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை (30.01.2011) இரவு தமது 83 ஆவது வயதிலே அப்பலோ மருத்துவமனையிலே காலமானார்.
பொன்.வல்லிபுரம் ஐயா சிறந்த ஆளுமையும் தொண்டுணர்வும் உயர்ந்த மனிதநேயப் பண்புகளும் கொண்டு நம் மத்தியில் வாழ்ந்த ஓர் மாமனிதன். மேலும் தொண்டு உணர்வுக்கு அடிப்படையே தெய்வீக உணர்வுதான். அந்த உணர்வு இருந்த காரணத்தினாலே கொழு கொம்பு இல்லாமல் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. உயிருக்கு புறாவிற்கு தன்னையே கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி இதயம் நிமிர்ந்து எழுந்தால்.
இமயம் வளைந்து கொடுக்கும் என்பதை வாழுகின்ற போதே வரலாறாக்கிக் காட்டினார்கள் அப் பெருமகான். இந்த வகையில் முன்னைநாள் மயூரபதி ஸ்ரீபத்திகாளி அம்பாள் ஆலய அறங்காவலர் பொன். வல்லிபுரம் ஐயாவின் மனித நேயத்தையும் இறை பணியையும் நாம் உண்மையிலே பாராட்ட வேண்டும். இவ்வாலயத்தின் முன்னேற்றத்திற்காக 22 வருடங்களுக்கு மேலாக தெய்வீகப் பணியாற்றி வந்ததுடன் இந்நாட்டின் ஒரு தலைசிறந்த சமூகத் தொண்டனாகவும் தெளிந்த அறிஞனாகவும் உயர்ந்த பண்பாளனாகவும் அறிவும், ஆற்றலும் ஆளுமையும் மிக்கவராக தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சகல இனத்தவர்களோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகியவர் பொன்.வல்லிபுரம் ஐயா.
மேலும் கம்பன் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளரும் ஸ்ரீ ஜயவர்தனபுர விரிவுரையாளருமாகிய பிரசாந்தன் பொன்.வல்லிபுரம் "சதாபிஷேகம்' பெரு விழாவையொட்டி "அருட் கவசம்' என்ற நூலை வெளியிட்ட பொழுது தமது உரையிலே கூறினார் ஓர் ஆலயத்தின் பெருமைக்கும் மேன்மைக்கும் உயர்வுக்கும் அவ்வாலயத்தின் அலங்காவலர்கள், தர்மகர்த்தாக்களையே சாரும் என்றார். இந்த வகையில் அமரர் பொன் வல்லிபுரம் ஐயாவின் அர்ப்பணிப்பும் ஸ்ரீபத்திரகாளி அம்பாளின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் பக்தியும் தர்மத்திலும் சத்தியத்திலும் உள்ள தளராத பிடிப்பும் பக்த அடியார்களால் என்றும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
"மனிதன் நன்றாக வாழ வேண்டும்' என்பதுதான் ஆண்டவனின் கட்டளை, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று திருமூலர் கூறியது போல பொன்.வல்லிபுரம் ஐயாவின் பெரு முயற்சியினால் இவ்வாலயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைந்தது மட்டுமன்றி 22 வருடங்களுக்கு மேலாக பாற்குடப் பவனியையும் தேர்த் திருவிழாவையும் யாவரும் பாராட்டும் வண்ணம் உலகளாவிய ரீதியிலே செய்து காட்டியவர் என்பதை யாவரும் அறிவர்.
இத்துடன் சமயத்தை வளர்க்கும் பணியாக அறநெறிப்பாடசாலை, பண்ணிசைப் வகுப்புகள், சமய சம்பந்தமான சொற்பொழிவுகள், கலைஞர்கள் கௌரவிப்புகள், அந்தண சிவாச்சாரியார்களுக்கான பாராட்டுகளும் கௌரவிப்புகளும் யாவற்றையும் திறம்படச் செய்து காட்டியவர் இவர் என்றால் மிகையாகாது.
இவர் அரசியல் பிரமுகர்கள் முக்கியமாக மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, ஜயவர்தனா, தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காலஞ்சென்ற அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோருடன் மிகவும் தொடர்பு கொண்டிருந்தார். இத்துடன் அரசியல் பக்கசார்பின்றி எல்லோரையும் இவ்வாலயத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்த பெருமையும் இவரையே சாரும். இவர் வேற்று மதத்தலைவர்கள், கற்றவர்கள், கல்லாதவர்கள், செல்வந்தர், ஏழைகள், பெரியோர், சிறியோர் என்று பாராது யாவரிடமும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் பழகிவந்தார். இவரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் இவரின் அகன்ற சான்றோன் ஆளுமைப் பண்புகளைக் கண்டு வியந்ததுண்டு. "நற்பண்பாளர்' "காண்வோன்' என்ற தமிழ்ப் பதங்கள் இவருக்குச் சாலப்பொருந்தும். பாரதியின் பாடலைப் போல யார்க்கும் எளிமையாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்த் திகழ்ந்து குன்றினில் ஏற்றி வைத்த தீபம் போல் விளங்கினார். உண்மையிலேயே மனித நேயம் மிக்க ஓர் உயர்ந்த மானிடப் பிறவியை இந்த உலகம் இழந்துவிட்டது.
மனித குலத்தின் ஓர் மாணிக்கம் போல் திகழ்ந்த பொன். வல்லிபுரம் ஐயாவின் மறைவு யாவருக்கும் மிக்க ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "ஆராத் துயருக்கு யார் ஆறுதல் சொல்வர்' மேலும் சமுதாயத்தில் மனிதன் எப்படிப் பயனுற்று வாழவேண்டும் என்பதை தன் சொல்லிலும் செயலிலும் செய்து காட்டிய பெருமனிதர் பொன். வல்லிபுரம் ஐயா.
பொன். வல்லிபுரம் ஐயா என்று நம் மத்தியில் இல்லையென்றாலும் அவரின் மகத்தான தெய்வீகப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி யாவும் காலத்தால் அழியாதவை. அவை யாவும் பொன் எழுத்துகளால் எழுதப்படவேண்டியவை.
மரணம் என்பது நல்லோர் என்றும் சான்றோர் என்றும் கற்போர் என்றும் அற்றோர் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை என்பது ஒன்றே நமக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. யோகர் சுவாமிகள் கூறியது போல் "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்' என்ற அவரின் பொன் மொழிக்கு நம் அனைவரும் செவிசாய்த்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக நாம் யாவரும் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி பிராத்திப்பதோடு, அமரர் பொன்.வல்லிபுரம் ஐயா அவர்கள் உருவாக்கிய இலட்சியங்கள் எல்லாம் மேலும் மேலும் வளர வேண்டும், வளம் பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல மயூரபதிப் பத்திரகாளி அம்பாளை பிரார்த்திப்போமாக.

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com