theeruvil

               

                      தைபிறந்தால் வழிபிறக்கும் மூன்றாம்ஆண்டில்          
VALVAI.COM!....

         2010 தை 16 ஆம் நாள் வல்வெட்டித்துறையின் வரலாற்றில் புதிய மைல்கல்லான நாளாகும். வரலாற்றிற்கே வழியைக்காட்டும் வல்வெட்டித்துறைக்கு 21ம் நூற்றாண்டின் புதிய ஒழுங்கிற்கமைய வழிகாட்டும் VALVAI.COM “வல்வைக்காக” எனும் குரலுடன் பிறப்பெடுத்த நன்னாளாக இந்நாள் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. வரலாறும் வல்வெட்டித்துறையும் இருவேறு சொற்களானாலும் வரலாற்றின் மறுசொல்லாகவே வல்வெட்டித்துறை தொடர்ந்து சிறப்பிடம் பெறுவதால் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒத்தகருத்துள்ள சொற்களாக மாற்றமடைந்து காணப்படுகின்றன. வலவை வல்லமை வல்வை இவை மூன்றும் வெவ்வேறு உருவங்களானாலும் திறமை அல்லது வலிமை என பொருள்தரும்  தமிழ்ச் சொற்களாகும். இத்தகைய பெரும்சிறப்புமிக்க மண்ணிற்காக அல்லது அம்மண்ணில் உருவாகிய சமுதாயத்திற்காக பிறப்பெடுத்த VALVAI.COM அதனது முதலிரண்டு அகவைகள் கடந்து மூன்றாம் ஆண்டில் இத்திருநாளில் காலடிவைக்கின்றது.

      அறுபது ஆண்டுகளிற்கு மேலாக “கெடுபிடி” யுத்தகால  சூழ்நிலையில் வாழ்ந்த எங்கள் சமுதாயம் இன்று பொருளாதார சுபீட்சத்தை நோக்கி முற்று முழுதாக  திரும்பியுள்ளது. இலங்கைத் தீவானது ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற முதல் இருபது வருடங்கள் பொருளாதார விடுதலை வேண்டியும் பின்வந்த நாற்பது வருடங்கள் அரசியல்விடுதலை வேண்டியும் முழுமையாக அறுபது வருடங்கள் போர்க்கால மனோநிலையிலேயே எமது சமுதாயம் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. அறுபது வருடங்கள் என்பது வருடங்களின் காலக்கணிப்பில் ஒரு சுற்று வட்டமாகும். இத்தகைய சுற்று வட்டம் ஒன்றை முடித்து இரண்டாம் சுற்று வட்டத்தில் வல்வெட்டித்துறை இப்பொழுது நடைபோடத் தொடங்கியுள்ளது.

    சமுதாயம் என்ற உள்வட்டத்தை விட்டு தேசியம் என்ற வெளி வட்டத்தில் சந்தேகமற்று நடைபோட்ட நாங்கள் நம்பிக்கையற்ற நம்பிக்கைத் துரோகங்களினால் தனித்துவிடப்பட்டோம். ஆனாலும் நாம் நம்பிக்கையிழக்கவில்லை. நம்பிக்கைதானே வல்வெட்டித்துறையின் வாழ்க்கை முறை. நடைமுறை அனுபவங்களினுடாக தீர்க்கமானபாதையில் வழிநடந்த எமது பட்டறிவின் பயனாக வல்வெட்டித்துறை இன்று புதியபாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளது.

    போராட்ட சூழ்நிலையில் தொடர்பறுந்து அல்லது தொடர்பற்று காணப்பட்ட “தாய்நில வல்வைக்கும் புலம்பெயர் வல்வையருக்கும் இணைப்பாய் இருப்போம்“ என்னும் தாகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட VALVAI.COM அ தனது முதலாவது வருட நிறைவுக்குள்ளாகவே அதனை முழுமையாக சாதித்திருந்தது என்றால் மிகையில்லை. அத்துடன் VALVAI.COM இன் பிரவாகத்துடன் தொடர்ந்துவரும் எமது மண்நோக்கிய ஏனைய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் தாய்நில மற்றும் புலம்பெயர் வல்வையர்களின் இணைப்பின் அடையாளமாகவே மிளிர்கின்றமை பாராட்டத்தக்கது.

      உலகம் முழுவதும் பரந்துவாழும் வல்வையரின் இணைப்பின் தொடர்ச்சியாக VALVAI.COM அதனது இரண்டாவது வேலைத்திட்டமாக VDAG இனை அறிமுகப்படுத்தி செயல்படுத்த தொடங்கியது. “வல்வெட்டித்துறை அபிவிருத்திக்கான செயற்குழு” எனப் பொருள்தரும் இவ்வமைப்பின் மூலம் இன்றைய வல்வெட்டித்துறையின் பலதேவைகளும் அவைகளை நிவர்த்தி செய்யும் பலதிட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் ஆங்கில வகுப்புகள்  IT Centre மற்றும்  VEDA கல்விநிலையம் என்பன கல்விசார் முயற்சிகளாக VDAG இனால் நேரடியாக ஆரம்பிக்கப்பட்டன. வல்வெட்டித் துறையினின்றும் புலம்பெயர்ந்து பலநாடுகளில் சிதறுண்டுவாழும் வல்வையரின் ஊர்த்தாகத்தை தீர்க்கும் முயற்ச்சியில் தனிநபர்கள், குழுக்கள், சங்கங்கள் என பல்வேறுவகையிலும் ஊருக்கு எதையாவது செய்து விடத்துடிக்கும் அல்லது செய்துகொண்டிருக்கும் உணர்வாளர்களை இனங்கண்டு அவர்களின் விருப்பத்திற்கு வழிகாட்டுவதோடு அத்தகையோரின் நற்செயல்களினை பகிரங்கமாக அனைத்து வல்வையரிடம் எடுத்துச் செல்வதிலும், அங்கீகாரம் பெறுவதிலும் VALVAI.COM தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.

      கடலோடிகளினால் நிரம்பிவழியும் வல்வெட்டித்துறையின் புவியியல் அரசியல் சமூக மற்றும் இவைகளின் நீண்டவரலாற்று ஆய்வுகளின் பின் வல்வெட்டித்துறையின் எதிர்கால நலனை முன்னிட்டு துறைசார் வல்லுனர் களின் உதவியுடன் வல்வெட்டித்துறையின் “நவீனமீன்பிடித் துறைமுகம்” VALVAI.COM ஆல் அறிமுப்படுத்தப்பட்டது. வல்வெட்டித்துறையின் இட அமைவிற்கு ஏற்றமுறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் கடலுடன் இரண்டறக்கலந்திருக்கும்  எங்கள் வாழ்க்கையினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஏற்றது.  அருகிவரும் வெளிநாட்டு கப்பல் வேலைவாய்பு களிற்கு மாற்றீடாக எங்களின் மண்ணிலும் கடலிலும் உருவாகும் மீன்பிடித்துறைமுகமே எங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் மீனவர் மாலுமிகள் இணைப்புடன் ஆரம்பமாகும் இத்திட்டம் வளரும்போது எதிர்காலத்தில் கைத்தொழில் நகரமாக வல்வெட்டித்துறை மாற்றமடையும்.

       VALVAI.COM இன் இரண்டாம் வருடபயணத்தில் குறிப்பிடக்கூடியது பலவருட சீரற்ற அல்லது அரசஅதிகாரிகளின் பணிப்பின்கீழ் இயங்கிவந்த வல்வெட்டித்துறையின் புதிய நிர்வாகசபைக்கு வழங்கிய பகிரங்க ஆதரவாகும். அதிகப்படியான மக்களின் கருத்திற்கு தலைசாய்த்த விதத்தில் அவர்களின் தெரிவினை விமர்சனத்திற்கு அப்பால் நின்று ஏற்றுக்கொண்டதன் மூலம் “வல்வைக்காக வல்வையின் மக்களிற்காக“ என்ற நிலையினை VALVAI.COM நடுநிலையுடன்  கடைப்பிடித்து நின்றது. இதன் தொடரான அடையாளமே பதியநகரசபை நிர்வாகத்தினருக்கான எமது உறுதியான ஆதரவுக்கரமாகும். சட்டரீதியாக மக்களினால் தெரிந்தெடுக்கப்பட்ட நகரசபை ஒரு சில மாதங்களிலேயே நல்லதிட்டங்களின் அடிப்படையில்  செயலாற்ற தொடங்கி இருப்பது மக்களிற்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. 
     வல்வெட்டித்துறை மக்களின் குரலாக என்றுமே VALVAI.COM செயலாற்றும். ஏனெனின் எங்களின் பார்வை எப்பொழுதும் தனிநபர்கள் அல்ல, எங்களுடைய சமுதாயமே. எங்களின் பயணம் எப்பொழதும் நேர்ப்பயணமே!....

          தை பிறந்து புதிய ஆண்டில் காலடிவைத்துள்ளோம். தை என்னும் இரண்டெழுத்து எதைக்குறிக்கின்றது? தை(பூச)நாள் தைமாதம்  தை(தைத்தல்) எனஅகராதிகள் பொருள்தருகின்றன. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என குறிப்பிடப்படும் 'தை' இங்கு நம்பிக்கையை குறித்து நிற்கின்றது. தைரியம் துணிச்சல் என்பன நம்பிக்கையின் மறுசொற்களாகும். இத்தகைய தைரியம் என்ற சொல்லின் முதல் எழுத்தான தை வருடத்தின் முதல் மாதமாக நம்பிக்கையின் அடையாளமாக எம்மவர்களிளால் கைக்கொள்ளப்படுகின்றது. ஆனால் சோதிடநூல்களில் சித்திரைமாதமே முதலாவது மாதமாகவும் தைமாதம் வருடத்தின் பத்தாவது மாதமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
    தை மாதமும் அதனுடன் இணைந்துவரும் தைப்பொங்கலும் உழவர் திருநாளாகவே எமது தாய்நிலத்திலும்  புலம்பெயர்ந்த எம்மவர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. உழவர்கள் தமது உழைப்பின் அறுவடையை தைமாதத்திலேயே பெறுகின்றனர். தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற சொற்றொடர் அதனுடாகவே பிறந்திருக்கும் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

       இந்தியாவின் கடல் ஆராய்ச்சியாளரும் சிறந்த முதுநிலை மாலுமியும் கடலோடி மற்றும் கடல்வழிவணிகம் போன்ற நூல்களின் ஆசிரியருமான திரு.நரசைய்யா என்பவரை அண்மையில் சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது. “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்ற சொல்லடிகளைப்பற்றி அவர் கூறிய விளக்கம் புதியதாக இருந்தது. ஐப்பசி முதல் மார்கழி வரை வடகிழக்குத்திசையில் இருந்து பலமாகவீசும் பருவக்காற்றான வடகீழ் பருவக்காற்று தை மாதத்தில் மந்தமாக வீசஆரம்பிக்கும் ஆனால் இக்காலத்தில் வங்காளவிரிகுடாவின் வடக்கிலிருந்து தெற்குநோக்கிய நீரோட்டம் ஆரம்பமாகும். இதன்மூலம் இக்காலங்களில் வங்காளவிகுடாவின் வடக்கு மற்றும் வடகிழக்குத்திசையில் இருந்து புறப்படும் கப்பல்கள் இலகுவாக மட்டக்களப்பின் அக்கரைப்பற்று வரை பயணம் செய்யமுடியும்.

இயந்திரசாதனங்களின் உதவியின்றி இயற்கையான காற்று நீரோட்டம் என்பவைகளின் உதவியுடன் கடற்பயணம் புரிந்த வங்காளவிரிகுடாவின் கடலோடிகளிற்கு மேற்படி தை மாதாம் மிகவாய்ப்பானதாக அமைந்திருந்தது. இந்நிலையில் அக்கடலோடிகளிளால் உருவாக்கப்பட்டதே “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் சொற்றொடர் ஆகும். எங்களின் முன்னையவர்களும் வங்காளவிரிகுடாவினையே தமது முற்றுமுழுதான வாழ்வாதாரமாக கொண்டிருந்தமை வரலாறாகும். “தை பிறந்தால் வழிபிறக்கும்” இது வல்வைக் கடலோடிகளினால் வல்வெட்டித்துறைக் கடலோடிகளிற்காக உருவாக்கப் பட்டதாகும். வங்கக்கடலின் வடக்கிலும் வடகிழக்கிலும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள்கூட்டத்தினர் வாழ்வதில்லை.

என்றும் நம்பிக்கையுடன்
  VALVAI.COM
 16.தை.2012

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com