
தானம்
நான் சிறுபையனாக, இளைஞனாக இருந்த காலங்களிலே எனது மனதிலே இருந்த எதிர்பார்ப்புக்களை, கற்பனைகளை, அவை என்மீது ஏற்படுத்திய தாக்கங்களை, ஏமாற்றங்களை இப்போது சிறிது சிந்தித்துப் பார்க்கிறேன்.
அந்த எதிர்பார்ப்புக்களும், கற்பனைகளும் என்னை உருவாக்குவதில் பெரிய பங்கு வகித்திருக்கிறதென்பது இப்போது எனக்கு நன்கு விளங்குகிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் அவை அத்தனையும் உணர்வு பூர்வமாக ஏற்பட்டவையா அல்லது அறிவுபூர்வமாக ஏற்பட்டவையா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் உணர்வுபூர்வமாக ஏற்பட்டவையாகத்தான் பலதும் இருந்திருக்கக்கூடும் என்று யூகிக்க முடிகிறது. அந்தக் கற்பனைகளில் ஒன்றை இன்று அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பார்க்கிறேன்.
சிறுபையனாக இருந்த காலத்திலே பலர் என்னுடைய உதாரண புருஷர்களாக இருந்தனர். அவர்களில் இருவரைப்பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.ஒருவர் மலைக்கள்ளன் என்ற திரைப்படப் பாத்திரம். (மலைக்கள்ளனாக MGR நடித்தபடியால் MGR ஐப் பிடித்ததா? அல்லது MGR மலைக்கள்ளனாக நடித்தபடியால் மலைக்கள்ளனைப் பிடித்ததா என்று தெரியவில்லை)இரண்டாமவர் Robin Hood என்ற சரித்திரப் பாத்திரம்.
இந்த இருவருக்குமிடையில் இருந்த ஒற்றுமை என்னவென்றால், "இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பது".
அந்த வயதில் பார்க்கும்போது மிகுந்த உன்னதமான இலட்சியம் போலவே தெரிந்தது. பல்கலைக்கழகம் செல்லும் இளைஞனாக இருந்தபோது இந்த இலட்சியத்தின் வேகம் அதிகரித்தது.இந்த நேரத்தில் ஒரு அறிஞன் சொன்ன வாசகங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. "கல்லூரி வாழ்க்கையின் போது இலட்சியவாதியாக இல்லாதவன் கல்லூரி வாழ்க்கையின் துடிப்பை இழந்துவிடுகிறான். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகும் இலட்சியவாதியாக இருப்பவன் வாழ்க்கையையே இழந்துவிடுகிறான்".
இந்தக் கூற்றை நான் முற்றாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இளைஞர்களாக இருக்கும் காலத்திலே பலரும் இலட்சியவாதிகளாக இருப்பார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. ஏழைகள் படும் துன்பங்களும் பணக்காரர்களில் சிலர் செய்யும் அநியாயங்களும், அட்டகாசங்களும் எம்மில் ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான தாக்கங்களே காரணம். ஏழைகள் தவறான காரியங்களில் ஈடுபட்டால் அவற்றை நியாயப்படுத்தும் காரணங்களைக் (கற்பனையில்) கண்டுபிடித்து எம்மை நாமே சமாதானப் படுத்திவிடுவோம். கல்லூரி வாழ்க்கை முடிந்து நாமே உழைத்து எமது வாழ்க்கையை நடத்த முற்படும் காலத்திலே அந்த அறிஞன் கூறியதுமாதிரி இலட்சியங்கள் தேய்கின்றன. என்ன காரணம்? கொண்ட இலட்சியங்களில் பிழையா?அல்லது,இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு எமது மனதில் வகுத்த வழிமுறைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையா?
இரண்டு காரணங்களும் பெருமளவில் பங்களிக்கின்றன. சிறுவயதில் என் மனதில் ஏற்பட்ட இலட்சியத்தை அலசிப் பார்ப்போம்.
"இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பது".
இதிலே இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
ஒன்று: எடுப்பது
இரண்டு: கொடுப்பது.
முதலில், எடுப்பது பற்றி ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். இந்த உதாரணம் மிகைப்படுத்தப் பட்டிருக்கின்ற போதிலும், 'எடுப்பது' என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலையும், தார்மீகப் பிரச்சனையையும் வெளிப்படுத்துகிறது. இருப்பவரிடமிருந்து இல்லாதவருக்குக் கொடுக்கும் இலட்சியம் கொண்ட உங்களை ஒரு மருத்துவராகக் கற்பனை செய்யுங்கள். உங்கள் மருத்துவமனையில் நான்கு நோயாளிகள் இருக்கிறார்கள்.ஒருவருக்கு, இரண்டு கண்களும் சேதப்பட்டுள்ளன. இரண்டாமவருக்கு, இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளன. மூன்றாமவருக்கு, இருதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது.நான்காமவருக்கு, புதிய நுரையீரல் மாற்றம் அவசியம்.
சாதாரண தலைவலியுள்ள ஒருவர் உங்களிடம் வருகிறார். உங்கள் மனதிலே ஒரு எண்ணம் வருகிறது."இந்த ஒருவரின் அங்கங்களை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தி விட்டால், ஒருவர் இறக்கக்கூடும். ஆனால் மற்ற நால்வருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்".இந்த எண்ணத்துடன் எத்தனை பேர் ஒத்துப் போவீர்கள். அநேகமாக ஒருவருமில்லை.மற்றவர்களிடமிருந்து அவர்கள் விருப்பமின்றி எடுக்கும் உரிமை எமக்குக் கிடையாது. அரசாங்கங்கள் வரி என்னும் பெயரில் மக்களிடமிருந்து எடுக்கும்போதும், அவர்களின் அனுமதியுடனேயே எடுக்கிறார்கள். வாக்குகள் போடும்போது மக்கள் அந்த அனுமதியைத் தருகிறார்கள். சில அரசாங்கங்கள், குறிப்பாகச் சர்வாதிகார அரசாங்கங்கள் அதிக வரிச்சுமையைச் செலுத்தி பல தொழில்களை வீழ்ச்சியடையச் செய்கிறார்கள். பல இடங்களில் தாதாக்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
தங்கமுட்டை போடும் வாத்தைக் கொன்றவர்கள் கதை போல ஆகிவிடும்.
பணக்காரர்கள் இருப்பதால் பல தொழில்கள் நடைபெறுகின்றன. நேரடியாகவும், பணக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் அரசாங்கங்கள் மூலமும் ஏழைகளும் நன்மை அடைகிறார்கள். ஆகவே பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்குக் கொடுப்பது என்பது நீண்டகாலத்திற்கு உதவாது. மூன்று மணிநேரப் படங்களுக்கு மாத்திரம் பொருந்தும்.மாறாக அதிகமான பணக்காரர்களை உருவாக்கவேண்டும்.இது மாத்திரம் போதுமா? இல்லை.
இப்போது 'கொடுப்பது' பற்றிப் பார்ப்போம்.
"மற்றவர்களுக்கு உதவுவதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது" என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. Sir Winston Churchill அழகாகச் சொல்கிறார், "We make a living by what we get. We make a life by what we give"" எமக்குக் கிடைப்பதை வைத்து நல்ல வாழ்தலை அடைகிறோம். கொடுப்பதின் மூலம் வாழ்க்கையின் மேன்மையை அடைகிறோம்"
எனது தமிழ் மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு அவர் சொன்னதைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.'கொடுப்பது' என்று வரும்போது பணக்காரர்களால் மாத்திரம்தான் கொடுக்கமுடியுமா? இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.பல உதாரணங்களைப் பார்ப்போம்.
உங்களிடம் இளமை, உடம்பிலே சக்தி இருக்கிறதா? அதிலே சிறிதைக் கொடுக்கலாம்.பாதையைக் கடக்க முயற்சிக்கும் ஒரு மூதாட்டியைக் கையைப் பிடித்து அவர் போகுமிடத்திற்கு அழைத்துச் சென்று பாருங்கள். அன்று முழுதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா? வாசிக்கப் பழகும் சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்கு வாசிக்கப் பழக்குங்கள். உங்கள் கையில் நேரம் இருக்கிறதா? மருத்துவமனையில் தனிமையில் வாடும் முதியவர்களுடன் பேசுவதில் உங்கள் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சாப்பாட்டுக் கடையில் உங்கள் மீது மோதிக் காப்பியைக் கொட்டிவிட்டுப் பரிதாபமாக நிற்கும் பணியாளருக்கு உங்களிடம் இருக்கும் ஒரு புன்னகையைக் கொடுங்கள்.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவம். பல வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு நான் போயிருந்தபோது எனக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையில் ஒரு விவாதம். போகுமிடத்திற்கு 20 ரூபாதான் தருவேனென்று நானும் 25 ரூபா தரவேண்டுமென்று அவரும் விடாப்பிடியாக இருந்தோம். முடிவில் 25 ரூபாவிற்கு நான் ஒத்துக்கொண்டு பயணம் தொடங்கியது. இறங்கும்போது அவருக்கு 30 ரூபாய்கள் கொடுத்தேன்.அவர் திகைப்புடன் என்னைப் பார்த்தார். "நீங்கள் என்னைக் கேட்டு நான் கொடுத்தது 5 ரூபா. நானாகக் கொடுத்தது 5 ரூபா" என்று சொல்லியபடி நான் நடந்தேன்
இந்தச் சம்பவம் அவரில் என்ன தாக்கம் ஏற்படுத்தியதென்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்ற மனப்பான்மைக்கு உரமூட்டியது. மலைக்கள்ளனும் Robin Hood உம் ஆரம்பத்திலே இந்தக் கொடுக்கும் மனப்பான்மையை எனது உள்ளத்திலே விதைத்தார்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனாலும் அவர்கள் சொல்லிய எடுக்கும் மனப்பான்மையை உதறித்தள்ளியபின்பு கொடுக்கும் மனப்பான்மையின் வலு கூடிக்கொண்டே போகிறது.
சிறுவயதிலிருந்து கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து வந்தால் உலகின் பல பிரச்சனைகளுக்கே இடமில்லை என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.உலகத்திலே இன்று பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதின் ஒரு காரணம் கொடுப்பதை விட எடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதே என்று நினைக்கிறேன். தமக்குத் துன்பம் விளைவித்தவர்களிடமிருந்தும் அவர்களைச் சார்ந்தவர் களிடமிருந்தும் எவற்றை ( உயிர் உட்பட) எடுக்கலாம் என்ற பழிவாங்கும் எண்ணம் தலைதூக்கி நிற்பதால்தான் பயங்கரவாதச் செயல்கள் வளர்ந்து வருகின்றன.
இதையே திருவள்ளுவர் அழகாகச் சொல்கிறார்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்"
உமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மையைச் செய்யுங்கள். அவர்களுக்கு அந்த நேரத்திலே தேவையானவற்றைக் கொடுத்து அவர்களுக்கு நன்மையைச் செய்யுங்கள்.இப்போது திருவள்ளுவர் உயிருடன் இருந்தால் அவருக்கு ஒரு அன்பான கோரிக்கை விடுவேன். என்னை மிகவும் கவர்ந்த இந்தக் குறளின் ஒருவார்த்தையை மாற்றி அமைக்கமுடியுமா?'ஒறுத்தல்' என்ற வார்த்தைக்குப் பதிலாகத் 'திருத்துதல்' என்ற வார்த்தையைப் பாவிக்கலாமா?
இந்தச் சந்தர்ப்பத்திலே சிங்கப்பூர்த் தமிழர்களிடம் (இந்தியர்கள் அனைவரையும் குறிப்பிடுகிறேன்) ஒரு கேள்வி.
"எமது சமூகத்தில் கொடுக்கும் மனப்பான்மை எந்தளவில் உள்ளது?"பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கும். அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்பதுதான் எனது கருத்து.உதவும் மனப்பான்மையை நாம் திட்டம் போட்டு வளர்க்கமுடியுமா? அப்படி வளர்க்க முடியுமென்றால் தனிப்பட்டமுறையிலும் சமூகம் என்ற முறையிலும் எமக்கு மிகுந்த நல்ல பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லோராலும் இலகுவில் கொடுக்கக்கூடிய இரண்டு கொடைகளைப் பற்றிக் கூறவிரும்புகிறேன்.
1. இரத்ததானம் .சிங்கப்பூர் போன்ற நகர்ப்புறச் சூழலில் இரத்ததானம் என்பது மிகவும் வரவேற்கப்படக்கூடியதான தானமாகும். அதனுடைய முக்கியத்துவத்தைப்பற்றி இங்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும்.இளவயதிலிருந்தே இரத்ததானம் செய்யும் மனப்பான்மையை எமது இளையர்களிடையே வளர்க்கவேண்டும். சிங்கப்பூர்த் தமிழன் என்றவுடன் இரத்ததானம் செய்வதில் முன்னுக்கு நிற்பவன் என்ற நல்ல பெயர் மற்றைய சமூகத்தினரிடையே ஏற்படவேண்டும்.மற்றைய சமூகத்தினர் பாராட்டவேண்டும் என்பதற்காகச் செய்யவேண்டும் என்று நான் கருதவில்லை. அப்படியான பெயர் செய்யும் காரியத்திற்குக் கிடைத்த ஒரு இடைப்பலன். முக்கியமான பலன் என்னவென்றால் தானம் செய்யும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் சுய கௌரவம். தங்கள் செயலை நேசிப்பார்கள். தங்களையே நேசிப்பார்கள். அவரவர் சுய பிம்பத்தின் பலம் கூடும். மற்ற விடயங்களிலும் கொடுக்கும் எண்ணம் வளரும்.
2. இப்போது கூறப்போகும் இந்தக் கொடைக்குத் தனிப்பெயர் கிடையாது. ஆனாலும் எல்லோராலும் முடியும்.MRT, பஸ் ஆகியவற்றில் இப்போது அடிக்கடி பயணம் செய்கிறேன். அவற்றில் எனக்குப் பிடிக்காத ஒரு விடயத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். நல்ல எண்ணத்தில் செய்யப்பட்டிருந்தபோதிலும் இது நாம் வாழும் சமூகத்தைப் பற்றி ஓரளவிற்கு விளக்குகிறது. "இந்த இடங்களைக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், கர்ப்பணிப்பெண்களுக்கும் விட்டுக் கொடுக்கவும்" என்று எழுதியிருக்கும் வாசகங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
சிறிது சிந்தித்துப் பாருங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத்தான் விட்டுக் கொடுக்கவேண்டுமா? ஒதுக்கப்படாத இடங்களையும் விட்டுக்கொடுப்பதுதான் மனிதாபமிக்க செயலாகும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், களைப்புடன் காணப்படுபவர்களுக்கும் பிரத்தியேக இடம் ஒதுக்கி எழுதும் தேவையில்லை. அப்படியானவர்களுக்குத் தமது இருக்கையை விட்டுக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.ஆனால் நடைமுறையில் இருக்கும் உண்மை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இருக்கும் இளையர்களோ கண்களை மூடியபடி இருப்பார்கள். தூங்குகிறார்களோ அல்லது தூங்குவதுமாதிரி நடிக்கிறார்களோ தெரியாது. ஆனால் தமக்குத் தெரியாமலே தமக்கே தீங்கு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. தேவைப்படுபவர்களுக்கு உமது இருக்கையைத் தானம் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் சக்தியை உணர்வீர்கள்.
இந்த இடத்தில் MRT யில் உள்ள விளம்பரத்தைப் பற்றி எனது கருத்து. "Please give up your seats to the needy" என்றிருக்கிறது. 'give up' என்பது ஏதோ ஒன்றை விட்டுவிடுங்கள் என்று ஒலிக்கிறது. ஏதோ ஒன்றை இழந்து விடுகிறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மாறாக, "Please offer your seats to the needy" என்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 'offer' என்று சொல்லும்போது நீங்கள் தானம் செய்கிறீர்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது.
ஆனாலும் முன்பு குறிப்பிட்டமாதிரி, பிரத்தியேக இடங்கள் ஒதுக்கும் வாசகங்கள் இல்லாமலும், விளம்பரங்கள் இல்லாமலும் தமது இருக்கையை மற்றவர்களுக்குத் தானம் செய்யும் மனப்பான்மை இருக்கும்போதுதான் ஒரு சமூகத்தைப் பண்பட்ட சமூகமாகக் கருதமுடியும்.இதை 'இருக்கைதானம்' என்று சொல்லலாமா? இந்தக் கொடைத்தன்மையை எமது சமூகத்தினரிடம் வளர்க்கவேண்டுமென்பது எனது கோரிக்கை.
இவற்றைச் செயலாற்றுவதற்கு என்ன செய்யலாம்?
நல்ல பலன் தரும் செய்கைகள் என்று நினைப்பவர்கள் தாம் முதலில் செய்யத்தொடங்கலாம். தம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் இதைப்பற்றிக் கூறலாம்.ஆனால் மேலே கூறிய இரண்டு கொடைகளையும் செய்வதற்கு எனக்குப் பிரச்சனை உள்ளது.எனக்கு வயது 66. ஆகவே இரத்ததானம் செய்ய முன்வந்தாலும் ஏற்றுக் கொள்வாரில்லை.எனது இருக்கையைத் தானம் செய்யலாமென்று நினைத்தாலும் செய்வதற்குச் சங்கடமாயுள்ளது. அமர்ந்திருக்கும் இளையர்களைக் கேலி செய்வது போலுள்ளது. இருந்தபோதிலும் என்னைவிட முதியவர்களுக்கு முன்வந்து கொடுத்துள்ளேன். அப்படிக் கொடுக்கும்போது உடனடியாக எனக்குத் தமது இருக்கையை இளையர்கள் தந்துதவும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. முன்மாதிரியாகச் செய்துகாட்டினால் செய்வதற்கு இளையர்கள் உள்ளார்கள் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது.
இலகுவாக உலகிற்குக் கொடுக்கக்கூடிய இன்னுமொரு கொடையையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எந்நேரமும் ஒரு புன்னகை!
-----------------------------------------------------------------------
இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது. (www.thangameen.com)
Dr Saba Rajendran blog:
http://asrajendran.wordpress.com