
சமீபத்தில் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். அவை எனது மனதில் ஏற்படுத்திய சிந்தனை அலைகளை உங்களுடன் அலச வந்துள்ளேன்.
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமத்து மக்கள் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அக்கிராமத்துச் சிறுமிகளுக்கு எட்டு வயதாகும்போது ஊர்கூடி அவர்களுக்குத் தவளை ஒன்றுடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.
அவர்களுடைய இந்தச் செயல் ஒரு பிற்போக்கான செயல் என்று அவர்களுக்கு விளக்குவதற்காக, அக்கிராமமக்கள் சிலருடன் சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சிலர் கலந்துரையாடிய நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

உங்களில் பலரை மாதிரிச் “சிறுமிகளுக்குத் தவளைகளுடன் திருமணம் செய்து வைக்கிறார்களே” என்று எனது மனமும் பதைபதைத்தது. இப்படியான செயல்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, சமூகத்திலிருந்து நீக்குவதற்கு இம்மாதிரியான நிகழ்ச்சிகள் உதவும் என்றே நினைத்தேன். ஆனாலும் நிகழ்ச்சி முடிவிலே மனதிலே ஒரு நெருடல் இருந்தது.
படித்த சிலர் தமது அறிவுத்திறமையையும் வாதத்திறமையையும் பாவித்துப் படிப்புக் குறைந்த சில கிராமவாசிகளின் உணர்ச்சிகளைக் கொச்சைப்படுத்திக் காயப்படுத்தியது போலவே எனக்குத் தெரிந்தது. சட்டத்தின் துணை கொண்டு, கிராமவாசிகள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் சடங்குகளைப் பலாத்காரமாகத் தடை செய்தது சரியா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த நிகழ்ச்சி நடந்த சிலநாட்களில், ஒளிபரப்பட்ட ஒரு தமிழ் சினிமாவையும் பார்த்தேன். அதிலே ஒரு காட்சி. படித்த பணக்காரப்பெண் ஒருத்தி வழியிலே பூனை ஒன்று குறுக்கே போய் விட்டதென்பதற்காகத் தான் செய்யவிருந்த வேலையை ஒத்திப் போடுகிறாள். பூனை குறுக்கே போவது துர்ச்சகுனம் என்று நினைப்பவர்களுக்கு எதிராக எவரும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அடிப்படையில் ஒன்றுதான்.
சிறுமிக்குத் தவளையைத் திருமணம் செய்து கொடுத்தால், அத்தவளை சிறுமியை ஆசீர்வதித்து அவளுக்கு நன்மை செய்யும் என்பது கிராமவாசிகளின் நம்பிக்கை.
நடக்கப் போகும் கெட்டதை அறிந்து பூனை தடுக்கிறது என்பது படித்த அந்தப் பெண்ணின் நம்பிக்கை.
இரண்டிலுமே இரண்டு பிராணிகள் மனிதர்களுக்கு நன்மையைச் செய்கின்றன என்பதுதான் அடிப்படை.
“இரண்டுமே மூடநம்பிக்கைகள். அழிக்கப்படவேண்டியவை”, என்று சீர்திருத்தவாதிகள் சொல்லிக் கொள்வார்கள்.
“மூடநம்பிக்கைகள் என்றால் என்ன?” என்ற கேள்வி எழுகிறது.
சிலர் சொல்வார்கள், “விஞ்ஞானத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாதவை மூட நம்பிக்கைகள்”
இந்தக் கூற்றை விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்னும் கண்டு பிடிக்க முடியாத, அறிந்து கொள்ள முடியாத பல விடயங்கள் இருப்பதை உணர்ந்து அவர்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆராய்ச்சி செய்கிறார்கள்.
மூடநம்பிக்கை என்பதற்கு எனக்குத் தெரிந்த விளக்கம், “ என்னுள் இருக்கும் நம்பிக்கைகள் ‘மூடத்தனமில்லாத’ நம்பிக்கைகள். என்னால் ஏற்றுக் கொள்ளப்படாத விடயங்களை மற்றவர்கள் நம்பினால் அவை மூடநம்பிக்கைகள்”
நம்பிக்கைகள் இல்லாத மனிதர்கள் யார்?. ஒருவருமே இல்லை.
“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”.
இது ஒருவரின் நம்பிக்கை. அவருடைய நண்பர் சொல்லுவார், “இந்த மூடத்தனமான நம்பிக்கையால் இந்த மூடன் கார், வீடு என்ற வசதிகள் இல்லாமல் அலைகிறான்”
இந்த உதாரணம் மாதிரி எத்தனையோ நம்பிக்கைகள். ஒருவருக்கு முக்கியமாகத் தெரியும் நம்பிக்கை மற்றவருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும்.
முந்திய இரு சம்பவங்களுக்கும் வருவோம். இதனையொட்டி, சமீபத்தில் நான் கேட்ட ஒரு சம்பாஷணை. (கற்பனையோ அல்லது உண்மையாக நடைபெற்றதோ தெரியவில்லை).
ஒரு ஆங்கிலேயர் தனது இந்திய நண்பரிடம் சொல்கிறார். “ சச்சின் தெண்டுல்கர் அற்புதமான கிரிக்கெட் வீரர்தான். எனக்கும் மிகவும் பிடித்தவர். ஆனாலும் இந்தியர்களாகிய நீங்கள் அவரைக் கடவுள் போலக் கொண்டாடுவதுதான் சரியில்லை”

அவருடைய இந்திய நண்பர் சொன்னார், “ எங்களுக்கு மாடும் கடவுள். மயிலும் கடவுள். யானையும் கடவுள். பாம்பும் கடவுள். ஆகவே இது ஒன்றும் பெரிய விடயமில்லை”.
சிரிப்புக்குரிய சம்பாஷணை போலத் தெரிந்தாலும் உண்மையிலே கீழை தேசத்து வாழ்க்கைத் தத்துவம் அதிலே அடங்கியுள்ளது. எல்லா உயிரினத்து உயிர்களும் உன்னதமானவை என்ற எண்ணத்தில் விளைந்த தத்துவம்.
‘புல்லாகிப் பூண்டாகி மரமாகிப் பல் மிருகமாகி--- “ என்று வரும் தேவாரம் ஒரு சான்று.
‘வாழ்க்கை ஒரு முறைதான்” என்ற மேலை நாட்டுத் தத்துவத்திற்கு மாறுபட்டது.
இறப்பு, பிறப்பு என்பவை முடிவில்லாதது என்பதுதான் எமது இரத்தத்தில் ஊறிய தத்துவம்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் கூற்று இன்னுமொரு உதாரணம்.
எம்மைச் சுற்றிப் பாருங்கள். எப்படியான நம்பிக்கைகள் பெரும்பாலானோர் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது புரியும்.
“ யானை முக விநாயகரை வணங்குகின்றோம்”
“ இராவணனுடனான யுத்தத்தில் இராமருக்கு உதவியாகக் கருட பகவான் வந்ததாக நம்புகிறோம்”
“கிழக்குத் திசையிலிருந்து பல்லி சொல்வதால் சகுனம் நல்லதென்று நம்பிச் செயல்படுகிறோம்”
இப்படிப் பலப்பல நம்பிக்கைகள் எம்மெல்லோர் மனதிலும் இருக்கின்றன. மேற் கூறிய விடயங்களை நான் கொச்சைப்படுத்துவதாகவோ அல்லது கண்டிப்பதாகவோ தயவு செய்து எண்ண வேண்டாம். எமது சமூகத்தின் நம்பிக்கைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.
ஆகவே, சிறுமிகளைத் தவளைகளுக்கு மணம் செய்து கொடுப்பதால் குடும்பத்திற்கும் ஊருக்கும் நன்மை விளையும் என்ற சம்பிரதாயம் அந்தக் கிராமத்திலே ஏற்பட்டதில்ஆச்சரியமில்லை என்பதைக் குறிப்பிடுகிறேன்.
ஆனால் திருமணம் செய்து வைப்பதென்பது பாரதூரமான விடயம் போலத் தெரிகிறது. ஏனென்றால் படிப்பறிவுடைய நாம் திருமணம் என்றதும் சிறுமிகள் தவளைகளுடன் உடலுறவு கொள்வது மாதிரிக் கற்பனை செய்கிறோம். சிறுமிக்கு ஒரு மரப்பொம்மையுடன் திருமணம் என்றால் அலட்டிக்கொள்ளவே மாட்டோம்.
வாழ்க்கையில் கடவுளும், இயற்கையும், மற்றவர்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைச் சிறுவர்கள் மத்தியில் விதைப்பதற்காகப் பல சமூகங்கள் பலவிதமான சடங்குகளை வைத்திருக்கின்றனர்.
‘உங்களுக்கு விருப்பமான பொருட்களைப் பரிசாகக் கடவுள் தருவார்” என்ற நம்பிக்கையை விதைப்பதற்காக மேலைநாட்டோர் Santa Claus கிறிஸ்மஸ் பண்டிகையின்போது விருப்பமான பரிசைத் தருவதாகச் செயல்படுகிறார்கள்.
அதே போலத்தான் அந்தக் கிராமவாசிகள் தமது சிறுமிகளுக்குத் தைரியம் ஊட்டுவதற்காக அந்தச் சடங்கை வைத்துள்ளார்கள்.
“அப்படியாயின் இந்தச் சடங்கை நிறுத்தி விடுமாறு அந்தக் கிராமவாசிகளுக்குச் சொல்லக்கூடாதா?” என்று கேட்கலாம்.
“அறிவுரை சொல்ல வேண்டும்” என்றுதான் சொல்லுவேன். ஏனென்றால் அந்தக்கிராமம் அப்படியே இருக்கும் பட்சத்தில், அந்தச் சிறுமியும் அதே கிராமத்தில் வாழும் வரைக்கும் சடங்கைச் செய்வதால் அந்தச்சிறுமிக்கு ஒருபாதிப்பும் இல்லாத போதிலும், அந்தச் சிறுமி மேற்படிப்புப் படிக்க நேரிட்டால் தனக்கு நடந்த சடங்கை நினைத்து வெட்கப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
கிராமங்கள் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் இதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக இருப்பதால் இப்படியான சடங்குகளை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டியது அவசியம்.
ஆனால் இந்த முயற்சிகளை மேற்கொள்ளும்போது அந்தக் கிராமவாசிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாதென்பதுதான் என் வாதம்.
“தர்க்கக் காரணங்களால் இல்லாமல் வாழும் சூழ்நிலை காரணமாக ஒருவருக்குள்ளே சென்ற நம்பிக்கைகளைத் தர்க்கரீதியாக வெளியே கொண்டு வர முடியாது.”
சிறிது சிறிதாகத்தான் மாற்ற வேண்டும். சில பிரசங்கங்களால் மாற்ற முடியாது. அவர்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். முடிந்தால் சில காலம் அவர்களுடன் வாழ வேண்டும்.
“இந்தச் சடங்கைச் செய்யாததால் இந்த வருடம் மழை பெய்யவில்லை” என்று அவர்கள் சொன்னால் அதற்குப் பதில் தர வேண்டும்.
மற்றவர்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுடைய உலகமும் மற்றவர்களின் உலகத்தை விட மாறுபட்டது. பிரத்தியேகமானது.
ஒரு மனிதனுடைய அனுபவங்கள், நம்பிக்கைகள், உறவுகள், உணர்ச்சிகள், சுற்றாடல்கள், உடல்நிலை, கற்பனைகள் என்பவற்றில் அவனது உலகம் தங்கியுள்ளது.
நிச்சயமாக இன்னொருவருடைய உலகம் ஒரே மாதிரியாக இருக்க மாட்டாது. ஒத்த சூழ்நிலையில் வாழும் இருவருடைய உலகங்களின் சிறுபகுதிகளில் ஒற்றுமை இருக்கலாம்.
வாழும் சூழ்நிலையே ஒவ்வொருவருடைய உலகத்தையும் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. மிகத் தெளிவாகத் தெரியும் உண்மை.
இந்துக் குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாகவே இறக்கின்றனர்.இஸ்லாமியக் குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலானோர் இஸ்லாமியராகவே இறக்கின்றனர்.கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலானோர் கிறிஸ்தவராகவே இறக்கின்றனர்.
ஆனாலும் தமது மதமே உண்மையானதென்றும், மற்றவர்களுக்கு இந்த உண்மையைத் தெரியப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு என்று நம்பிச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.
நான் இங்கிலாந்திலே படித்துக்கொண்டிருந்த காலத்திலே என்னைச் சந்திப்பதற்காக இரண்டு மத போதகர்கள் வந்தார்கள்.
“நான் வேறு மதத்தைச் சேர்ந்தவன். இந்தச் சந்திப்பிலே எனக்கு விருப்பமில்லை” என்று சொன்னேன்.
“நீங்கள் ஒரு மங்கலான விளக்கை வைத்துள்ளீர்கள். மிகப் பிரகாசமான ஒரு விளக்கை உங்களுக்குத் தர விரும்புகிறோம். தயவு செய்து ஒரு மணி நேரம் நாங்கள் சொல்வதைக்கேட்கமுடியுமா ?”. தயவாய்க் கேட்டார்கள்.
“ஒரு மணி நேரமென்ன. அதற்கும் மேலும் தருகிறேன். ஆனால் அதே அளவு நேரம் எனது மதத்தைப்பற்றி நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்”.
சிறிது நேரம் யோசித்து விட்டு, அப்புறம் வருகிறேன் என்று சொல்லிப் போனவர்கள் திரும்ப வரவில்லை.
ஒருவரை மாற்ற நினைப்பவர்கள் மற்றவரது மாற்றுக் கருத்துக்களையும் செவி மடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் உலகமும் தனி உலகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூகங்களாக வாழ்ந்த காலங்களில் பலருடைய உலகங்களில் ஒற்றுமை அதிகம் இருந்தது. ஆனால் தனித் தனிக் குடும்பங்களாக வாழுகின்ற இந்தக் காலத்திலே வேற்றுமைகளே அதிகம். உணர்வுகளுக்கு மதிப்புக் குறைந்து அறிவுக்கு முதலுரிமை கொடுக்கும் காரணத்தினால் ஒவ்வொரு தனி மனிதனின் உலகமும் மற்றவர்களிடமிருந்து விலகியே செல்கிறது. இது ஆரோக்கியமானதல்ல.
இப்படியாக வேற்றுமைகள் அதிகரிக்க அறிவு மாத்திரம் காரணமல்ல. கோபம், பொறாமை, பழிவாங்கல், செருக்கு போன்ற பல மனித உணர்ச்சிகளும் காரணம்.ஆனாலும், பல உலகங்களையும் ஒட்ட வைக்கக்கூடிய அற்புதமான உணர்ச்சியையும் இயற்கை எமக்குத் தந்துள்ளது.
இந்த அரிய பசைதான் ( wonder gum) - அன்பு!
------------------------------------------------------------------------------------
இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது. (www.thangameen.com)
Dr Saba Rajendran blog:
http://asrajendran.wordpress.com