
ஒவ்வொரு வினாடியும் எமது செயல்பாடுகளை உள்மனதும் வெளிமனதும் சேர்ந்துதான் செய்கின்றன. சிந்தித்துச் செயல்படுவது வெளிமனது. தானாகவேசெயல்படுவது உள்மனது. சிலர் சாப்பிடும்போது தம்மை அறியாமலே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் " சாப்பாடு எப்படி?" என்றுகேட்டால் சாப்பாட்டில் என்ன கறிவகைகள் இருந்தது என்பதே தெரியாது. வேறு சிலர் சாப்பிடும்போது மிகுந்த விழிப்பாயிருப்பார்கள். மிகவும் ரசித்து,ருசித்துச் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட வகையறாக்கள் பற்றி விபரமாகச் சொல்லுவார்கள்.
நாங்கள் செய்கின்ற எல்லா விடயங்களிலும் விழிப்புணர்வும், உள்மனமும் சேர்ந்தே செயல்படுகின்றன. ஆனால், கிட்டத்தட்ட 95% செயல்பாடுகள் உள் மனதினால் நடைபெறுகின்றன. 5% மாத்திரமே வெளிமனதின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உள்மனதில் என்ன புதைத்து வைக்கப்பட்டிருக்கிறதென்று பார்ப்போம்.
"நாம் யார்?" என்ற கேள்வி கேட்டால் எமது அனுபவம்தான் நாம் என்ற பதில்தான் வரும். அனுபவம் என்று சொல்லும்போது, அவை எமது வாழ்க்கையில் உண்மையாகவே நடைபெற்ற சம்பவங்களில் தங்கியிருந்தபோதிலும், அந்தச் சம்பவங்களுக்கு என்ன அர்த்தம் கொடுத்து, அவற்றை எப்படி உருவகப்படுத்திஎமது மனதிற்குள் போட்டு வைத்திருக்கிறோமென்பதுதான் முக்கியம்.
உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சிறுவயதில் நீங்கள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்வதற்காக வரிசையில் நிற்கிறீர்கள். அப்போதுஉங்களுக்கு ஏற்கனவே பிடிக்காத ஒரு பணக்காரப் பக்தன் வந்தவுடன் கோயில் அர்ச்சகர் அந்தப் பணக்காரனுக்கு முன்னுரிமை வழங்கி மற்றவர்களைஅலட்சியம் செய்கிறார். இந்த நிகழ்ச்சி உங்கள் மனதில் ஒரு எண்ணத்தை உண்டாக்கி விடுகிறது. "கடவுள் இல்லை. இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது".அந்த இரு மனிதர்கள் மேல் ஏற்பட்ட கோபம் கடவுளின் மேல் வெறுப்பாக உங்கள் மனதில் பதியப் படுகிறது. அந்த நாளுக்குப் பிறகு நடக்கும் பலசம்பவங்களுக்கான அர்த்தங்களை உங்கள் எண்ணத்தை வலுவடையச் செய்யக்கூடியது மாதிரித்தான் கொடுப்பீர்கள்.
ஆனால் அர்ச்சகர் பணக்காரனுக்கு முதல் மரியாதை கொடுத்த சம்பவம் அதைப் பார்த்த இன்னொருவருக்கு வேறொரு அர்த்தத்தைக்கொடுத்திருக்கக்கூடும். " நானும் ஒரு பணக்காரனாகி விட்டால், ஊரிலுள்ளவர்கள் எல்லாம் எனக்கு மரியாதை கொடுப்பார்கள்". ஒரே அனுபவம்.வித்தியாசமான பார்வைகள். இந்த வித்தியாசமான பார்வைகளுக்குக் காரணம் இதற்கு முன்னால் இருவருக்கும் ஏற்பட்ட வித்தியாசமானஅனுபவங்கள்தான். ஒரு சம்பவம் நடக்கும்போது, அது பற்றி அதிகம் சிந்திக்காமலேயே, தானாகவே (automatic) மனதிலே அது பற்றிய தீர்ப்பும் (judgement)அபிப்பிராயங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. அதாவது நீங்கள் உங்களை உருவாக்காமல், ஏதோ ஒரு திசையில் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள்.
இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போம். சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் அவளின் தந்தை நேரத்திற்கு வரவில்லையே என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தபோது, அவள் தந்தை ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. அதிலிருந்து அப்பெண்ணின் மனதில் நேரத்திற்கு ஒருவர்வரவில்லை என்றால் ஏதோ விபத்து நடந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிடுகிறது. அதற்குப் பின்பு பத்திரிகைகளில் அவள் படிக்கும் செய்திகள்,கதைகள் அவளின் பயத்தை உறுதிப்படுத்துகின்றன. விபத்து ஏற்படும் நிகழ்ச்சிகள்தான் செய்திகளாக வருமென்பதையும், தாமதமாக வரும்இலட்சக்கணக்கான மனிதர்களுக்கு விபத்து நடைபெறுவதில்லை என்பதும் அவளுடைய மனதிற்குள் சென்று சேராது. பின்பு மணமாகி அவள் குடும்பம்நடத்தும்போது, ஒவ்வொரு முறையும் அவள் கணவன் தாமதமாகும் போதெல்லாம் அவளால் நிம்மதியாக இருக்கமுடியாது. அப்படியானசந்தர்ப்பங்களிலெல்லாம் கணவனுடன் மனஸ்தாபம்தான்.
'Placebo effect' என்று கேள்விப் பட்டிருப்பீர்கள், பல நோயாளிகள் மருத்துவர் மருந்து கொடுத்தால் தமது நோய் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையைக்கொண்டவர்கள். அவர்களுக்கு மருத்துவர் வெறும் வடிகட்டிய நீரை மருந்தென்று சொல்லி ஊசி போட்டால் அவர்களுக்குள்ள நோய் தீர்ந்துவிடும். அதிலும்அப்படியாகக் கொடுக்கப்படும் பொய் மருந்து எந்த வடிவத்தில் கொடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து நோயாளிகளின் நம்பிக்கையின் அளவு வேறுபட்டு,குணமாகும் வாய்ப்பும் வேறுபடுகிறது. சாதாரணமான மாத்திரைகளைவிட, capsule ஆகக் கொடுக்கப்படும்போது அதனுடைய பலன் அதிகமாயுள்ளது.நிறமில்லாக் capsule ஐ விட கருப்பு, சிவப்பென்ற capsule இன் பலன் அதிகம். ஊசியாகப் போட்டால் பலன் இன்னும் அதிகமாயிருக்கும். இது மருத்துவரீதியாகநிரூபிக்கப்பட்ட உண்மை.
ஆரம்பத்தில் நம்பிக்கைகளை நாம் உருவாக்குகிறோம். பின்பு நம்பிக்கைகள் எங்களை உருவாக்குகின்றன.
மனதிலே ஏற்படுகின்ற எண்ணங்கள், நம்பிக்கைகள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் நாம் சமமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலவற்றிற்கு மிகுந்தமுக்கியத்துவம் கொடுக்கிறோம். விழுமியங்கள் (values) பலவற்றை ஒவ்வொருவரும் வைத்திருக்கிறோம்.
சில விழுமியங்கள்:
" லஞ்சம் வாங்கமாட்டேன்"
"சட்டத்திற்குப் புறம்பாய்ச் செயல்பட்டுப் பணம் சம்பாதிக்கமாட்டேன்"
" மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கக் கூடியதான பொய் சொல்லமாட்டேன்"
"நண்பனுக்காக எதையும் செய்வேன்"
" நேர்மையாக நடப்பேன்"
ஆனால் இப்படியான விழுமியங்களுக்குள்ளும் சிலவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். நேர்மையை விட நட்பை முக்கியமாகக் கருதும்ஒருவன் நண்பனுக்காக நீதிமன்றத்திலும் பொய் சொல்லுவார். ஆனாலும் நேர்மைக்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பதால் அவரின் உள்மனம் இதைநினைத்து அல்லல் பட்டுக் கொண்டேயிருக்கும்.
சில விடயங்களைச் சட்டமாக மனதில் பதிந்திருப்போம்.
" உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் என்னோடு சத்தம் போட்டுப் பேசமாட்டீர்கள் "
" நாம் அன்பு வைத்திருப்பவர்கள் மீதுதான் அவர்களைத் திருத்தவேண்டுமென்பதற்காக அதிகமான கோபம் வரும்".
மேற்படி எதிரெதிரான சட்டங்களை மனதிலே வைத்திருக்கும் மனைவி, கணவனுக்கிடையில் அடிக்கடி பூசல்கள் வரத்தான் செய்யும். மற்றவருடையசட்டம் தெரிந்திருந்து, அதை மதிக்கப் பழகிவிட்டால் நிச்சயமாக இருவர் அன்பும் வெளிப்படும்.
"என்னைப் பார்த்துச் சிரித்தால் என்னிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்"
"என்மீது மரியாதை வைத்திருந்தால், என்னெதிரே சிகரெட் புகைக்கமாட்டார்".
தனிப்பட்ட சிலரின் நம்பிக்கைகள்:
"பணவிடயத்தில் பணக்காரப் பிள்ளகளை நம்பலாம்"
"ஒருமுறை கடன் கொடுத்தால் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்"
"யாருக்காவது உதவினால் பிற்காலத்தில் வேறொருவர் மூலம் அதற்கான பலன் எனக்குக் கிடைக்கும்"
"பணக்காரர்கள் எல்லோரும் சட்டத்திற்கு முரணான பல காரியங்கள் செய்துதான் பணம் சம்பாத்தித்திருப்பார்கள் "
"கெட்டவன் என்று நிரூபிக்கும் வரையில் எல்லோரும் நல்லவர்கள்"
"நல்லவன் என்று நிரூபிக்கும் வரையிலும் எல்லோரும் நம்பத் தகாதவர்கள்"
"சிகரெட் புகைப்பது, மது அருந்துவது ஆண்மைக்கு அடையாளம்"
" விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்"
"மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் அர்த்தம்"
சில சமூகங்களின் நம்பிக்கைகள்:
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்"
"ஊருக்கு நன்மை விளையுமாயின் தனிப்பட்ட ஒருவனை அழிப்பதில் தவறில்லை"
"நாட்டுக்காக / ஜாதிக்காக / மொழிக்காக / சமயத்திற்காக உயிரையும் தியாகம் செய்யலாம் "
" மங்கல காரியத்தில் விதவைகள் முன்னின்று செயல்படுதல் பேரிடரைக் கொண்டுவரும் "
" போரிலே புறமுதுகு காட்டி ஓடுவது கோழைத்தனம். முதுகிலே அம்பு பட்டுச் (குண்டு பட்டு) சாவது வீரனுக்கு அழகில்லை "
இப்படியாக எத்தனையோ விழுமியங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சட்டதிட்டங்கள் ஒவ்வொருவர் உள்மனதிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
சிந்தித்துப் பார்த்தால் சில நம்பிக்கைகளின் மூடத்தனத்தையும் அவை எவ்வாறு எம்முடைய ஆற்றலை மட்டுப்படுத்துகின்றன என்பதைப்புரிந்துகொள்ளலாம். வேறு சில நம்பிக்கைகள் எம்மை எப்படியாக ஊக்கப்படுத்தி நல்ல வழியிலே செலுத்துகின்றன என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
இவை எமது சிறந்த சேவகனும் மோசமான எதிரியுமாய் இருக்கின்றன.
எமது ஆற்றல் எமது நம்பிக்கைகளைப் பொறுத்தது. மட்டுப் படுத்தும் நம்பிக்கை ஆற்றலைக் குறைக்கும். ஊக்குவிக்கும் நம்பிக்கை ஆற்றலைக் கூட்டும்.நாம் ஆற்றுகின்ற செயல்பாடுகள் முடிவுகளை, அனுபவங்களைக் கொடுக்கின்றன. இந்த முடிவுகளும், அனுபவங்களும் நம்பிக்கைகளைஉருவாக்குகின்றன அல்லது அவற்றை வலுப்படுத்துகின்றன.
நம்பிக்கைழுஆற்றல் ழு செயல்பாடு ழு முடிவுகள் ழு நம்பிக்கை
இப்படி ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. நம்பிக்கை என்பது நிரந்தரமாக மனதிற்குள் தங்கிவிடுகிறது. இது மட்டுப்படுத்தும் நம்பிக்கையாக இருந்தால்,முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
ரோட்டிலே போகின்ற கார் ஒன்று எம்மீது புழுதி, சேறு ஆகியவற்றை வீசிச் செல்வதுமாதிரி, எம்மைச்சுற்றி நடைபெறும் சிறுசிறு சம்பவங்கள், எம்மீது அக்கறையற்றோர், நாம் மதிப்பு வைத்திருக்காதோர் போகிறபோக்கில் எமக்குள் விதைத்த நம்பிக்கைகளாக இருக்கக்கூடாது. எம்மை மட்டுப் படுத்தும் பலநம்பிக்கைகள் இப்படியாகத்தான் உருவாகியுள்ளன. நாமே சிந்தித்து எம்மை ஊக்குவிக்கக்கூடியதான நம்பிக்கைகளை, எண்ணங்களை எமதுமனதிற்குள்ளே விதைக்கவேண்டும்.
கணிதப் பாடத்தில் தான் ஒரு முட்டாள் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் நிச்சயமாக அப்படித்தான் இருப்பான். அவனுள் அந்த எண்ணம்வருவதற்குக் காரணம் தெரிந்தோ தெரியாமலோ அவனுடைய ஆசிரியரோ, நண்பரோ, பெற்றோரோ சில நேரங்களில் கூறிய வார்த்தைகளாகஇருக்கலாம். இப்படியாகத் தங்களைக் கணக்குப் பாடத்தில் முட்டாளென நம்பிக்கொண்டிருக்கும் மாணவனை ஆசிரியர்கள் , பெற்றோர் அடையாளம்கண்டு, ஆரம்பத்தில் மிக இலகுவான கணக்குகளை அவர்களைக் கொண்டு செய்வித்து அவர்களிடம் உள்ள அந்த எதிர்மறையான நம்பிக்கையை அழித்து, 'கணக்கில் நான் ஒரு கெட்டிக்காரன்" என்ற நம்பிக்கையை இடம்பெற வைத்தால் நிச்சயமாக அந்த மாணவன் பிற்காலத்தில் கணக்கில் சிறப்புப் பெற நல்லவாய்ப்புள்ளது.
"தான் ஒரு முரண்பாடற்ற மனிதன். எப்போதும் ஒரே மாதிரியான குணத்தையும், கொள்கையையும் உடையவன்" என்று மற்றவர்கள் தன்னைப்பற்றிநினைக்கவெண்டுமென்ற அடிப்படை ஆசை எல்லோர் மனதிலும் இருக்கின்றது. இந்த ஆசைதான் பலரையும் முரடன், நல்லவன், வள்ளல், கோபக்காரன்,ரோசக்காரன் என்று மற்றவர்கள் அவர்களை அழைக்கும்போது அதை ஒரு பெருமிதத்துடன் பார்க்கவைக்கிறது.
சிறுவயதில் ஒருவனைச் சுற்றியிருப்பவர்கள் முரடன் என்று முத்திரை குத்தினால், அவன் அதன்படியே நடக்கத்தொடங்குவான். ஒருவரை வள்ளல் என்றுயாராவது குறிப்பிட்டு அவருக்கு மேடையிலே மாலை போட்டால், அதை நிரூபிப்பதற்காகவே அவர் வள்ளல் குணத்தை வளர்த்துக் கொள்வார். கெட்டதும்உள்ளது, நல்லதும் உள்ளது. கொண்ட கொள்கையில் மாறாமல் பிடிப்பாக இருப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், இந்தப்போக்கு உங்கள் சிந்திக்கும்திறனைக் குறைத்துவிடுகிறது. மாறாமல் இருப்பதானாலும், வளைந்து கொடுப்பதானாலும் சிந்தித்துச் செயல்பட வேண்டுமேயொழிய, மற்றவர்கள் குத்தியமுத்திரைகளுக்கமைய நடக்கக்கூடாது.
நல்ல விளைவுகளைத் தரக்கூடிய நம்பிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு எமக்குள் விதைத்து வைத்தால் நிச்சயமாக நல்லவிளைவுகளைத்தான் தரும்.
உங்களை மட்டுப்படுத்தும் நம்பிக்கைகளையும் உங்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கைகளையும் அடையாளம் காணுங்கள். மட்டுப்படுத்தும் நம்பிக்கையைஅடையாளம் கண்டவுடனேயே அதனுடைய தாக்கம் குறைந்துவிடும். அதை மனதிலிருந்து நீக்குவதற்கு அதற்கு எதிர்மறையானதாக, ஊக்கிவிக்கக்கூடியதான நம்பிக்கையைத் தெரிவுசெய்து அதை மனதிற்குள் விதைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உதாரணமாக, "சட்டத்திற்கு முரணான வழியில்தான் பணக்காரன் ஆகலாம்".
நிச்சயமாகச் சட்டத்திற்கு மதிப்புக்கொடுப்பவராகவோ அல்லது பயந்தவராகவோ நீங்கள் இருந்தால், இந்த நம்பிக்கை உங்களை மட்டுப் படுத்தும். நீங்கள்பணக்காரனாக வருவதைத் தடுக்கும் நம்பிக்கை. பணக்காரனாக வருவதற்கான சந்தர்ப்பங்களை , " நானும் ஒரு கெட்டவனாகி விடுவேனோ?" என்றபயத்தினால் உள்மனது உதறித் தள்ளிவிடும்.
ஆகவே இந்த எண்ணத்தை முதலில் மாற்றவேண்டும். நல்ல வழியிலே பணக்காரனாக வந்தவர்கள் பற்றிய சுயசரிதைகளைப் படியுங்கள். புது நம்பிக்கைவரும்.
" நல்லவர்களும் பணக்காரர்களாகலாம்"
இன்னுமொரு உதாரணம்:
"சிகரெட் புகைப்பது ஆண்மைக்கு அடையாளம்"
இந்த நம்பிக்கை இருக்கும்வரை எவ்வளவுதான் முயன்றாலும் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தமுடியாது. ஆரோக்கிய வாழ்க்கைவேண்டுமென்பதற்காகப் புகைப்பவர்களில் பலர் தமது வாழ்நாளிலே அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதற்காக முயற்சித்திருப்பார்கள். தமது மன உறுதியை(will power) நம்பி இந்த முயற்சியில் ஈடுபடுவார்கள். ஒருமுறை முடியாவிடினும் மீண்டும் மீண்டும் விடா முயற்சி செய்வார்கள்.
மன உறுதியும் விடாமுயற்சியும் மாத்திரம் இருந்தால் போதாது. அவர்களால் அந்தப் பழக்கத்தை முற்றாக விடமுடியாது. ஏனெனில் புகைபிடிக்கும் பலர்மத்தியில், அந்த நேரம் அங்கு பெண்களும் இருந்துவிட்டால், அவர்களால் புகை பிடிக்காமல் இருக்கமுடியாது.
மேற்படி நம்பிக்கை உள்மனதில் இருக்கும்போது, மன உறுதி மூலம் விட நினைப்பது ஒரு கப்பலின் நிலை போன்றதுதான். automatic control இல் இருக்கும்ஒரு கப்பலின் சுக்கானைத் திருப்பித் திசையை மாற்ற முயல்வது மாதிரித்தான். தற்காலிகமானது. சுக்கானிலிருந்து கையை எடுத்தவுடன் automatic controlக்கு அமையக் கப்பல் ஓடுவதுமாதிரி, முயற்சியில் சிறிது தளர்ந்தவுடன் பழையபடி புகைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படியான முயற்சி உடம்பைவன்முறைக்கு உட்படுத்துவதற்குச் சமம். இரு வேறு கட்டளைகளுக்குட்பட்ட கப்பல் இயந்திரத்தில் தேய்வு ஏற்படுவது மாதிரி, விடாமுயற்சி மூலம் புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சிக்கும்போது, இந்த முயற்சி உள்மனதின் நம்பிக்கைக்கு மாறாக இருப்பதனால், உடம்பிலும் மனதிலும் psychologicalபிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புண்டு.
" நான் மன உறுதி இல்லாதவன். விடாமுயற்சி மூலம் ஒரு காரியத்தையும் ஆற்றமுடியாது" என்ற மட்டுப்படுத்தும் எண்ணம் உங்கள் மனத்திலே பதியவைக்கப்படுகிறது.
ஆகவே, உள்மனதில் இருக்கும் அடிப்படை நம்பிக்கையைப் போக்கவேண்டும். இதற்காக நீங்கள் முயற்சித்தீர்களானால், உங்களுக்குத் தெரிந்த, நீங்கள்கேள்விப்பட்ட எத்தனையோ பிரபல்யமான விளையாட்டுவீரர்கள், வர்த்தகர்கள், நடிகர்கள், மற்றவர்களால் மதிக்கப்படும் பலர் சிகரெட் புகைக்கும் பழக்கம்இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களை உதாரண புருஷர்களாக நினையுங்கள். புதிதாக ஒரு நம்பிக்கையை விதையுங்கள்.
" ஆரோக்கியமாக இருப்பதற்குப் புகை பிடிக்காமல் இருப்பது முக்கியம்"
அத்துடன் சிகரெட் புகைக்கும் நண்பர்கள் மத்தியில் நீங்கள் புகைக்காமல் இருப்பதாக ஒரு காட்சியை மனதிலே கொண்டுவாருங்கள். நண்பர்கள் உங்களிடம்சிகரெட்டை நீட்டுவதாயும், நீங்கள் சிரித்தபடியே வேண்டாமென்று ஒதுக்குவதுமாதிரியும், அதன்பின்பும் நண்பர்களும் நீங்களும் கலகலப்பாகச் சிரித்துப்பேசி மகிழ்வதாயும் கற்பனையில் காட்சியை உருவாக்கி, அதைத் திரும்பத் திரும்பப் பாருங்கள். புகை பிடிக்கும் பழக்கமும் போய்விடும். மனதும் உடம்பும்ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மட்டுப்படுத்தும் சில நம்பிக்கைகள்:
" எனது அம்மா, பாட்டி ஆகியோரும் உடம்பு பெருத்தவர்களானபடியால் என்னால் இளைக்கமுடியாது"
" கல்யாணம் முடிந்தவுடன் எல்லா ஆம்பிளைகளும் பெண்டாட்டி பேச்சைத்தான் கேட்பார்கள்". சில தாய்மார்கள் நினைக்கிறார்கள்.
" மாமிமார்கள் மருமக்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடமாட்டார்கள் ". சில மணப்பெண்கள் நினைப்பது.
மேற்கூறிய இரண்டில் ஒன்று இருந்தாலே பிரச்சனைதான். இரண்டும் இருந்துவிட்டால் கேட்கவே தேவையில்லை.
" பணமில்லாவிடில் ஒருவருமே மதிக்கமாட்டார்கள் "
" என்னுடைய தோலின் நிறம்/ ஜாதி/ மொழி / பெண்ணாக இருப்பது ( அல்லது ஆணாக இருப்பது) எனது உத்தியோக உயர்வுக்குத் தடையாக உள்ளது "
வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஊக்கமூட்டும் சில நம்பிக்கைகள்:
" எனக்குத் தேவையான சக்தியை இயற்கை (கடவுள் ) கொடுக்கிறது "
" என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு நான் பொறுப்பு "
- நாங்கள் பொறுப்பெடுத்தால்தான் எங்களால் மாற்றியமைக்கமுடியும். சோதனையில் மகன் நன்றாகச் செய்யாவிடில் ஆசிரியரின்பொறுப்பென்று தட்டிக் கழிக்காமல், தந்தையே பொறுப்பெடுத்தால் மகனைச் சரியான வழியில் செலுத்தலாம்.
" தோல்வி என்றோ அல்லது கூடாத அனுபவம் என்றோ ஒன்று இல்லை "
- கூடாத விளைவுகள் எற்பட்ட அனுபவம் இருக்கலாம். ஆனால் அது ஒரு பிரஜோசனமாகப் பாவிக்கக்கூடிய அனுபவம். ஒரு கணக்காளர் விட்டபிழையால் ஒரு தொழிலதிபருக்கு ஒரு மில்லியன் dollars நட்டம். தனது வேலை போய்விடும் என்று பயப்பட்ட அந்தக் கணக்காளரிடம், அந்த இழப்பினால்அவர் கற்றுக்கொண்ட விடயங்கள் என்னவென்று கேட்டுவிட்டு, அவரைத் தொடர்ந்தும் வேலையில் அமர்த்தினார் அந்தத் தொழிலதிபர். அவர் கூறியது "ஒரு மில்லியன் dollars செலவில் கற்றுக்கொண்ட அனுபவத்தை இழக்கத் தயாரில்லை ".
" சுற்றியுள்ள மனிதர்கள் பெரிய வளம் "
"எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத்தேவையில்லை. எமக்குப் புரியாத எவ்வளவோ அதிசயங்கள் இந்த அண்டத்தில் உண்டு "
" நான் நல்லதை நினைத்துச் செயல்பட்டால் என்னைச்சுற்றி எல்லாம் நல்லதாகவே நடக்கும் ."
" மற்றவர்களிடம் அன்பாக இருந்து அவர்களுக்கு உதவி செய்வதுதான் மனித வாழ்க்கையின் அர்த்தம் "
" ஒவ்வொருவரும் ஒரு காரியத்தைச் செய்யும்போது, அந்த நேரத்தில் அது சரியென்று நினைத்ததால்தான் செய்கிறார்கள்."
- இந்த நம்பிக்கை இருந்தால், மற்றவர்கள் செய்வதை ஒத்துக் கொள்ளாவிடினும், அவர்களைப் புரிந்து கொள்ளமுடியும்.
இப்படியான நம்பிக்கைகளை மனதினுள் வைத்திருப்பதால் ஏற்படும் பலன்களை நன்றாகப் புரிந்துகொண்டீர்களானால், உங்களை வழிநடத்தக்கூடிய,உங்கள் ஆற்றலை வளர்க்கக்கூடிய பல நம்பிக்கைகளை உங்களால் சிந்தித்து உருவாக்கமுடியும்.
உங்கள் உள்மனதில் புதைந்து கிடக்கும் நம்பிக்கைகளும் எண்ணங்களும்தான் உங்கள் செயல்பாடுகளாக, திறமைகளாக வெளிப்படுகின்றன.
கள்ளிச்செடியை விதைத்துவிட்டுக் கற்பகத்தருவை எதிர்பார்க்கமுடியாது.
உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய முக்கிய உண்மை என்னவென்றால், கற்பகத்தருவை விதைக்கின்ற உரிமை, சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் பல போர்கள் உலகிலே நடந்துள்ளன. நடக்கின்றன. இவையெல்லாம் வேறொருவரிடம் இருந்து எதிர்பார்க்கும் உரிமையும், சுதந்திரமும்.
ஆனால், உங்களின் நம்பிக்கைகளைத் (கற்பகத்தரு விதையைத்) தேர்ந்தெடுக்கக்கூடியதான உங்களுக்குள்ளேயே இருக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் எந்தளவிற்கு உபயோகித்துள்ளீர்கள் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
எதிர்காலம் இனிமேல்தான் பிறக்கப்போகிறது. அதற்கான அத்திவாரம் நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளும் எண்ணங்களும்தான்.
------------------------------------------------------------------------------------
இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது. (www.thangameen.com)
Dr Saba Rajendran blog:
http://asrajendran.wordpress.com