‘உனது வெற்றி உனது மனதில்‘ என்ற புத்தகத்தின் தலைப்பையொட்டி, வெற்றி என்றால் என்னவென்று ஓரளவு மேலெழுந்தவாரியாக ஏற்கனவே பார்த்துள்ளோம். அது ஒரு பாதை, ஒவ்வொருவருடைய வெற்றிப்பாதையும் தனித்தன்மை வாய்ந்தது, அதை அவரவர்தான் தீர்மானிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
இப்பொழுது மனம் என்றால் என்ன என்று பார்ப்போம்
மனம் என்றால் என்ன என்று பலரும் பலவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர்
ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம்
மூளையின் செயல்பாடுகளையும் மனதில் ஏற்படும் எண்ணங்களையும் பிரித்துப் பார்ப்பது மிகவும் சிரமமானது
மூளை
மூளை என்பது நாம் தொட்டுப்பார்க்கக்கூடியதாகத் தலைக்குள்ளே இருக்கும் உருவமுள்ள ஒரு பொருள்
ஆகவே முதலில் மூளையைப்பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
மூளை என்பது மிகவும் சிக்கலான குணாதிசயங்களைக் கொண்டது. அதன் செயல்பாடுகளைப் பூரணமாக அறிந்துகொள்வது இயலாத காரியம். மூளையின் செயல்பாடுகளைப்பற்றி விஞ்ஞானிகள் இன்றும் ஆராய்ச்சிகள் செய்தபடியே உள்ளனர். புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் பற்றி ஆராய்ச்சிக்கட்டுரைகள் வந்தவண்ணமேயுள்ளன. ஆனாலும் இதுவரை கண்டுபிடித்த பல விடயங்களை வைத்து, எமது வெற்றிக்கு உறுதுணையாக மூளையை நாம் பயன்படுத்தலாம்.
இலகுவில் விளங்கக்கூடியதான, ஏற்றுக்கொள்ளக்கூடிய models ஐ உதாரணமாகப் பயன்படுத்தி மூளையைப் பற்றி ஓரளவிற்கு நாம் அறிந்துகொள்ளலாம்.
தலைக்குள்ளே இருக்கும் இந்த மூளையின் எடை கிட்டத்தட்ட 3 இறாத்தல் இருக்கும். ஆண்களுடைய மூளை பெண்களுடைய மூளையின் எடையை விடச் சிறிது கூடியதாக இருந்தாலும், மற்றும்படி பொதுவாக எல்லோருடைய மூளையின் எடையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், ஒருவருடைய அறிவாற்றலையோ, செயல்திறனையோ மூளையின் எடை தீர்மானிப்பதில்லை. தனற்குள்ளே மூளை ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளில் முக்கியமாகத் தங்கியுள்ளன.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயமென்னவென்றால், நாம் பிறக்கும்போது இருந்ததைவிட, நாம் சிறுவர்களாக இருந்தபோது இருந்ததைவிட இப்போது அதிகமான விடயங்களை மூளை உள்ளடக்கியுள்ளது.
எம்முடைய அனுபவங்கள், நாம் வாழும் முறைகள் ஒவ்வொரு வினாடியும் மூளைக்குள்ளே மாற்றங்களை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.
பார்த்தல், கேட்டல், ருசித்தல், மணத்தல், உணர்தல் ஆகிய ஐம்புலன்கள் மூலமாகத்தான் மூளைக்குள்ளே விடயங்கள் செல்கின்றன. இப்படியாகச் செல்லும் விடயங்களுக்கு, ஏற்கனவே உள்ள அறிவுத்திறனைப் பாவித்து அர்த்தம் கொடுத்து, அவற்றை மூளை தனக்குள்ளே சேகரித்துவைக்கிறது. கற்பனை மூலம் புதுப்புது விடயங்களை உருவாக்கி அவற்றையும் சேமித்து வைக்கின்றது. மூளைக்குள்ளே இருக்கும் உயிரணுக்களிடையே ஏற்படும் தொடர்புக்களாக இவை சேகரிக்கப்படுகின்றன.
மூளைக்குள்ளே 10 கோடிக்கும் மேலான உயிரணுக்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை சிலருக்குச் சிறிது அதிகமாக இருக்கலாம். சிலருக்குக் குறைவாக இருக்கலாம். ஒருவருடைய திறன் இந்த எண்ணிக்கையில் தங்கியிருக்கவில்லை. இந்த உயிரணுக்கள் தமக்கிடையே ஏற்படுத்தும் தொடர்புகளின் எண்ணிக்கையிலும் தரத்திலும் தங்கியுள்ளன.
நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே மில்லியன் கணக்கான தொடர்புகள் எனது மூளைக்குள்ளே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கும் உங்கள் மூளைக்குள்ளும் ஏராளமான தொடர்புகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
Octopus என்கிற கணவாய்க்கு எட்டுக் கால்களிருப்பது தெரிந்திருக்கும். மூளையின் ஒவ்வொரு உயிரணுவிற்கும் 20000 க்கு மேற்பட்ட கால்களிருக்கின்றன. இவை எல்லாத் திசையிலும் பரந்திருக்கின்றன. Suction pad போன்ற இணைப்புக்கள் இந்தக் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. மற்றைய உயிரணுக்களின் கால்களிலுள்ள இணைப்புக்களுடன் இலகுவாகத் தொடர்பு கொள்ளக்கூடியதாக இந்த இணைப்புக்களின் அமைப்பு இருக்கின்றது. இரண்டு இணைப்புக்களுக்கிடையே பற்பல தொடர்புகள் சேகரித்து வைக்கப்படலாம்.
இப்படியாக உயிரணுக்களிடையே ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் எண்ணிக்கையே மூளையின் பலத்தைத் தீர்மானிக்கிறது.
கற்பனைக்கெட்டாத, எண்ணிக்கையிலடங்காத அளவு தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்தது மூளை. சாத்தியமான எல்லாத் தொடர்புகளையும் பாவித்துவிட்டேன். இனிமேல் சேகரித்து வைப்பதற்கு மூளைக்குள் இடமில்லை என்று சொல்லக்கூடிய மனிதர் எவருமேயில்லை. சாதாரணமாக ஒவ்வொருவரும் சாத்தியப்படக்கூடிய தொடர்பு எண்ணிக்கையில் 5 வீதத்திற்கும் குறைவானவற்றையே பாவிக்கிறோம்.
எவ்வளவு தொடர்புகள் சாத்தியமானவை என்று உத்தேசமாகக் கற்பனை செய்து பார்க்கலாம்.
ஒரு காகிதத்தில் எண் 1 க்குப் பக்கத்தில் 00000000……….. என்று 1 கோடி கில்லோமீற்றர் அகலமுள்ள காகிதத்தில் எழுதினால் எவ்வளவு தொகை வருமோ அந்தளவு தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியது.
இந்த அண்டத்திலேயுள்ள அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையுடைய தொடர்புகள் மூளையில் சேர்த்து வைக்கப்படலாம். நினைத்துப் பார்ப்பதற்கே முடியாது.
மூளை எல்லா நேரத்திலும் இயங்கிக்கொண்டே இருக்கும். தொடர்புகளை இடைவிடாமல் சேகரித்துக்கொண்டே இருக்கிறது.
புதிதாக ஒரு விடயம் கிடைக்கும்போது ஒரு புதிய தொடர்பு ஏற்படுகிறது. ஏற்கனவே தெரிந்த விடயம் திரும்பவும் மூளைக்குள் போகும்போது, ஏற்பட்டிருந்த தொடர்பின் தடிப்பு சிறிது கூடுகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான தொடர்புகளை ஏற்படுத்துகிறோமோ, அவற்றின் தடிப்பை அதிகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு மூளையின் பலம், ஆற்றல் அதிகரிக்கிறது.
மூளையின் அமைப்பு.
மூளையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வேலைகளைச் செய்கின்றன. தனக்குள்ளே வருவதையும் தானே உருவாக்குவதையும் சேமித்து வைக்கின்றது.நாம் பார்ப்பது, நாம் கேட்பது, நாம் ருசிப்பது, நாம் மணப்பது, நாம் சிந்திப்பது, நாம் பேசுவது, நாம் செய்வது ஆகிய இவற்றை வைத்துத்தான் தனது உயிர் அணுக்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துகின்றது. இந்தத் தொடர்புகளின் எண்ணிக்கையும், அவற்றை எவ்வளவு விரைவாக எமக்கு உதவக்கூடிய விதத்தில் சிந்தனைக்குக் கொண்டுவருகிறோமென்பதில்தான் எமது அறிவின் திறமையையும், வலிமையும் தங்கியுள்ளது.
ஒரு வினாடிக்கு 10 லட்சத்திற்கு மேல் ஏற்படும் இத்தகைய தொடர்புகளுக்கு ஒரு கட்டத்தில் மூளைக்குள் இடமில்லாமல் போய்விடுமா என்று நாம் யோசிக்கத் தேவையில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் அதன் எல்லையை அடையமுடியாது என்பதே உண்மை.
ஆகவே நாம் திட்டமிட்டுச் செய்ய வேண்டியதென்னவென்றால், எமக்கு வலிமையைக் கொடுக்கக் கூடியதாக மூளைக்குள்ளே தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். இதை ஒரு ஒழுக்கமான முறையில் எப்படிச் செய்யலாமென்பதை விரிவாக இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்
.
அதற்கு முன்னதாக மூளையினுடைய பகுதிகள் பற்றியும் அவை வேலை செய்யும் முறைகள் பற்றியும் சற்று விளக்கமாகப் பார்ப்போம். முன்பு குறிப்புட்டுள்ளதுமாதிரி, மூளை என்பது மிகவும் சிக்கலான வேலைகளைச் செய்கின்றதென்பதையும் , அதைப் பூரணமாக விளங்கிக்கொள்வதென்பது சிரமமானதென்பதையும் உணரத் தவறக்கூடாது.
ஆனாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு simple model ஐ , உதாரணத்தைக் கொண்டு மூளையினுடைய வேலைகளை ஓரளவு விளங்கக்கூடிய விதத்தில் பார்ப்போம்.
மூளையின் மூன்று அடுக்குகள்.
மூளையின் வடிவமைப்பை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். ஒரு model ஐ உதாரணமாக வைத்துப் பார்ப்போம்.
உங்கள் இடது கையை நிமிர்த்தி, விரல்களை மடக்கி ஒரு முட்டியாக்கி, அதை வலது கையால் மூடுங்கள். தண்டு போன்ற இடதுகை, நடுவிலே இடது விரல்களைக் குவித்ததினால் ஏற்பட்ட முட்டி, போர்வை மாதிரிப் போர்த்தி இருக்கும் வலது கை ஆகிய மூன்று பகுதிகள் மாதிரி மூளையையும் கற்பனை செய்து பார்க்கலாம்.
1. முதலாவது பகுதி: தண்டுப்பகுதி.
ஆரம்பகாலத்தில் மூளை தோன்றத் தொடங்கிய காலத்தில் இந்தப் பகுதி ஒன்றுதான் இருந்தது. இப்போது மேலேயுள்ள மூளைக்கும் உடம்புக்கும் இந்தத் தண்டுப்பகுதிதான் தொடர்பை ஏற்படுத்துகிறது. பல்லி, முதலை, பாம்பு போன்ற ஊர்ந்து செல்லுகின்ற ஜந்துக்களுக்கு இந்தத் தண்டுப்பகுதி மூளைதான் உள்ளது. ஆகவே ஊர்வனவின் மூளை என்று அழைக்கப்படுகிறது.
மூச்சுவிடுதல், இருதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற அடிப்படைக் கடமைகளைச் செய்யும் பொறுப்பு இந்தத் தண்டுப்பகுதி மூளைக்குத்தான்.
நாம் ஒரு நிலப்பரப்புக்குச் சொந்தமானவர் என்ற நினைப்பு இந்தப் பகுதியிலேயே ஒளிந்துள்ளது. எமக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுங்கோபம் ஏற்படுகிறது. அப்படியான கோபம் வரும்போதும் அல்லது ஆபத்து வரும்போதும் இந்த மூளைக்கு இரண்டு வழிகள்தான் தெரியும் ஒன்று சண்டை அல்லது ஒட்டம். முடிந்தவரை சண்டை போடுவார்கள். அல்லது அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள்.
2. இரண்டாவது அடுக்கு : நடுப்பகுதி
லிம்பிக் ஒழுங்கமைப்பு என்றழைக்கப்படும் இந்த மூளைப்பகுதி பாலூட்டிகளில் ( mammels) காணப்படுவதால் பாலூட்டிகளின் மூளை என்றும் அழைக்கப்படும்.
அதிகமான ஹோர்மோன்கள் இந்த நடுப்பகுதியில்தான் சுரக்கப்படுகின்றன. தாகம், பசி எடுத்தல், செமித்தல், நோய் தீர்த்தல் போன்ற கடமைகளுக்குப் பொறுப்பாக உள்ளது இந்தப் பகுதிதான். உணர்ச்சிகள், மனக்கிளர்ச்சிகள் ஆகியவற்றின் தோற்றமும் கட்டுப்பாடும் இந்தப் பகுதியிலேதான் நடைபெறுகின்றன. உணர்ச்சி சார்ந்த சிந்தனைகளுக்கும், விவாதங்களுக்கும் இந்தப் பகுதிதான் முன்னிலை வகிக்கின்றது.
சந்தோஷமான சூழ்நிலையில் endorphin என்ற ஹொர்மோன் சுரக்கின்றது. மூளையில் உயிரணுக்களுக்கிடையில் ஏற்படும் தொடர்புகளின் முக்கியத்துவம் பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளேன். இலகுவாகத் தொடர்புகள் ஏற்படுவதற்கு endorphin என்ற இந்த ஹோர்மோன் உதவி செய்கிறது. ஆகவேதான் சந்தோஷமான சூழ்நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு இலகுவாகத் தொடர்புகள் ஏற்படுகின்றன. ஞாபகசக்தி அதிகரிக்கிறது.
ஓவியங்கள், நாடகங்கள், சினிமா, வண்ணங்கள், விளையாட்டுகள் ஆகியவை சந்தோஷமான சூழ்நிலையை ஏற்படுத்துவதால், அவை நல்ல கல்விகற்பிக்கும் சாதனங்களாக உள்ளன. மன அழுத்தத்தைக் குறைத்து, இளகிய நிலையில் மனதை வைத்திருத்தல் கற்பதற்கு உதவுகிறது.
பயமூட்டக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களும், மனிதர்களும் உடனடியாக ஊர்வனவின் மூளைப்பகுதிக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் அதிகமாகச் சிந்திப்பதற்கு வாய்ப்பில்லை. அப்போது சண்டை அல்லது ஓட்டம் என்ற நிலைக்கு வருவார்களே தவிரச் சிந்திக்கும் திறன்கொண்ட மேற்பகுதிக்குத் தள்ளப்படமாட்டார்கள்.
சிறுவயதில் பாடசாலையில் உங்களை யாராவது ஆசிரியர் அடித்திருந்தால், அந்தச் சம்பவம் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் அவர் எதைக் கற்பிக்கும்போது அடித்தாரோ அது அநேகமாக ஞாபகத்தில் இருக்காது.
‘அடியாத மாடு பணியாது‘ என்பது மாடுகளுக்குப் பொருந்தலாம். ஆனால் நிச்சயமாக ‘அடியாத மாணவர் படிக்கமாட்டார்‘ என்பது மாணவர்களுக்குப் பொருந்தாது.
3. மூன்றாவது அடுக்கு: மேற்பகுதி
Neo-cortex என்ற இந்தப்பகுதி சிந்திக்கும் மூளை என்றழைக்கப்படும். இதனுடைய மற்றைய காரணப்பெயர்கள்;
‘தர்க்க மூளை‘, ‘புதிய மூளை‘
மூளையைப் பொறுத்தவரையில் புதிதாகத் தோன்றிய பகுதி இதுதான்.
மூன்று மி.மீ தடிப்புள்ள போர்வை மாதிரியுள்ள இந்தப்பகுதி விலங்குகளுக்கு இல்லை. Dolphin, திமிங்கிலம் ஆகியவற்றிற்குச் சிறிதளவில் உண்டு.
பார்த்தல், கேட்டல், உணர்தல் ஆகியவற்றால் ஏற்படும் தொடர்புகள் இந்தப் பகுதியில்தான் சேகரித்து வைக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரே இடத்தில் இல்லை. வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன.
உதாரணமாக, குயில் ஒன்று கூவுவதைப் பார்த்தோமேயானால், அதன் உருவம் நிறம் குரல் ஆகிய விபரங்கள் வெவ்வேறு பகுதிகளில் பதியப்படுகின்றன. பின்பு ஒரு நேரத்தில் குயில் என்று நாம் நினைக்கும்போது மூளையின் பல பகுதிகளிலுள்ள செய்திகள் ஒரே நேரத்தில் கிடைத்துக் குயிலை முழுமையாக ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது.
எல்லாப் புலன்களையும் ( பார்த்தல், கேட்டல், உணர்தல்…) பாவித்து நாம் விடயங்களை மனதில் வைத்தால் இலகுவில் ஞாபகத்திற்கு வரும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
சிந்திப்பது, உருவாக்குவது, ஓவியங்களை ரசிப்பது, சங்கீதத்தை அனுபவிப்பது ஆகியவை இந்த மேற்பகுதி மூளையிலேயே நடைபெறுகின்றன. அறிவுசார்ந்த விவாதங்கள் இந்தப் பகுதியில்தான் நடைபெறுகின்றன. உணர்ச்சிகளுக்கு ஆளாகி அவற்றிற்கு அடிமையாக உள்ளோரால் இந்தப் பகுதியைச் சரிவரப் பாவிக்கமுடியாது.
முன் தலைக்கு அடியில் உள்ள frontal lobe என்றழைக்கப்படும் சிந்திக்கும் மூளையின் ஒரு முக்கிய பகுதி பதின்மவயதில்தான் வளர்ச்சியடைகிறது.
உயர்ந்த கருத்துக்கள், நீதியைப்பேணுதல், எதிர்காலத் திட்டங்களை உருவாக்குதல், இரக்க உணர்வு கொள்ளுதல், பொதுநலக்கொள்கையிட்டுச் சிந்தித்தல் ஆகியவற்றிற்கு இந்த frontal lobe பகுதிதான் பெரும்பாலும் பொறுப்பாயுள்ளது.
ஆகவேதான் பதின்மவயதில் சமூகத்திற்கு உதவுதல், மற்றவர் நலம் பேணுதல் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டவர்கள்தான் பிற்காலத்தில் சமூக அக்கறை கொண்ட தலைவர்களாக உருவாகிறார்கள். பல தலைவர்களின் வாழ்க்கைச் சரிதைகளைப் பார்த்தால் இது நன்கு புலனாகும்.
Neo-cortex என்ற மூளையின் மேற்பகுதியை மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: இடது பக்கம். வலது பக்கம்.
இடது பக்கம்
வார்த்தைகள், மொழித்திறன், எண்கள், கணிதம், தர்க்கம் ஆகியவற்றிற்கு இந்தப் பகுதியே பொறுப்பு.
தர்க்கம் என்று கூறும்போது அது ஒரு நேர்கோட்டு முறையிலே இருப்பதாகும்.
ஒரு விடயத்திற்குப் பிறகு குறிப்பிட்ட வேறொரு விடயம் நடந்தால், அது மூன்றாவது விடயத்திற்கு இட்டுச் செல்லும். கணிதப் பாடத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றுடன் ஒன்றைக் கூட்டினால் இரண்டு வரும். இரண்டுடன் ஆறைக் கூட்டினால் சரியான விடை எட்டு. இது ஒரு நேர்கோட்டு முறை. மொழியை எடுத்துப் பார்த்தால், வார்த்தைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இலக்கணத்திற்கு அமைய, மரபுகளுக்கேற்ப வார்த்தைகளைக் கோர்த்தால் ஒரு அர்த்தம் வரும். இதுவும் நேர்கோட்டு முறை.
வலது பக்கம்
வண்ணங்கள், கற்பனை, பகல் கனவு, ஓசை நயம், அண்டவெளிப் பரிமாணம், காதல் , அழகு, விசுவாசம் ஆகியவை வலது பக்கத்து மூளையால் ஆளப்படுகின்றன.
இது நேர்கோட்டு முறைக்கு அப்பாற்பட்டது. ஒரு விடயத்தை ஒவ்வொன்றாகப் பார்க்காமல் முழுமையாகப் பார்ப்பது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவது. எனக்கு அழகென்று படுவது மற்றொருவருக்கு அழகில்லாமல் இருக்கலாம். ஒரு முகத்தை அடையாளம் காண வேண்டுமாயிருந்தால், கண் காது மூக்கு என்று தனித்தனியாக நேர்கோட்டு முறையைப் பின்பற்றுவதில்லை. முழுமையாகப் பார்க்கிறோம்.
ஒரு பாட்டை ரசிக்கும்போது அதிலுள்ள வார்த்தைகள், உணர்வுகள், ஓசைநயம் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து முழுமையாகப் பார்க்கிறோம். ஓசைநயத்துடன் அர்த்தம் நிறைந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பக்கூடிய கவிதைகள் மனதிலே ஞாபகத்தில் இருக்கும்.
சிலருடைய இடப்பகுதி மிகுந்த வலிமையுடையதாக இருந்தால் அவர்கள் மொழித்திறன், கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். சிலரின் வலதுபக்க மூளை வலிமையுடையதாக இருக்கும். அவர்கள் வலது பக்கம் ஆளும் விடயங்களில் சிறந்து விளங்குவார்கள்.
வலிமை குறைந்த பகுதி சம்பந்தப்பட்ட விடயங்களில் அக்கறையும் திறமையும் குறைவாகக் காணப்படும். இதை உணர்ந்தால், அதற்கான முயற்சிகள் எடுப்பதன் மூலம் வலிமை குறைந்த பகுதியையும் வலிமையுள்ளதாக மாற்றலாம். சிறு வயதில் இந்த முயற்சியைச் செய்யும்போது பலன் அதிகமாயிருந்தபோதிலும் இதற்கு ஒரு வயதுக் கட்டுப்பாடு இல்லை. எந்த வயதிலும் புதுப்புது விடயங்களை நாங்கள் கற்றுக் கொள்ளலாம்.
மனிதர்களுடைய அறிவுத்திறன்களைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.
- மொழி, கணிதம், தர்க்கம்
சாதாரணமாக IQ test என்று சொல்லப்படும் சோதனையின் போது மொழி, கணிதம், தர்க்கம் சம்பந்தமான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட சில அறிவுத் திறன்களே அங்கே சோதிக்கப்படுகின்றன.
இவற்றைத் தவிர்ந்த வேறு அறிவுத்திறன்களும் உண்டு.
- காட்சிகள், பரந்த இடங்களைப் பற்றிய அறிவுத் திறன். ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் இந்தத் திறன் படைத்தவர்கள்
- ஓசைகளை இனம் கண்டு சங்கீதத்தில் திறமையுடைய அறிவுத்திறன். இசைக்கலைஞர்களிடம் உள்ளது.
- உடல் உணர்வுத்திறன். உடலைப் பாவித்துக் காட்டப்படும் திறன். நாட்டியக்கலைஞர்கள் , நடிகர்கள், விளையாட்டுவீரர்கள் இந்தத் திறமை உடையவர்கள்.
- இணைந்து வேலை செய்யக்கூடிய திறமை உள்ளவர்கள்.
- இயற்கை பற்றிய அறிவு. இவர்கள் இயற்கையை ரசிப்பது மாத்திரமில்லாமல் அதை எப்படிப் பேணிக்காப்பாற்றலாமென்ற ஆர்வம் உடையவர்கள்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டுள்ளோர்.
ஒரு அறிவுத்திறனில் சிறந்து விளங்குபவர் அந்தத் துறையில் ஒரு விற்பன்னர் (specialist) என்று அழைக்கப்படுவார். அந்தத் துறை சம்பந்தப்பட்ட விடயங்களில் மற்றவர்கள் அவர்களின் உதவியை நாடிச் செல்வார்கள். எல்லா அறிவும் உள்ளவர் ஒரு முழு மனிதராக எல்லோராலும் மதிக்கப்படுவார். பல மனிதர்கள் சில அறிவுத்திறன்களைத் தம்முள்ளே கொண்டுள்ளவராக இருப்பார்கள். இவற்றுள் இதுதான் சிறந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அவரவர் திறமையிலும் ஆசையிலும் தங்கியுள்ளது. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம். ஒரு துறையிலே இயற்கையிலேயே அறிவுத்திறமை உடையவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக வேறொரு துறையில் தங்களைக் கட்டாயமாக இணைத்துக் கொண்டால், எப்போதும், முக்கியமாகத் தேவையான பணத்தைச் சம்பாதித்ததும், தாங்கள் எதையோ இழந்துவிட்டதான மன உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். IQ test என்ற பெயரில் மொழி, கணிதம், தர்க்கம் ஆகியவற்றையே சோதித்துவிட்டு, ஒரு சாராரை அறிவு கூடியவர்களென்றும் மற்றவர்களை அறிவு குறைந்தவர்கள் என்றும் தரப்படுத்தும் முறையினால் பல மில்லியன் கணக்கான மக்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. IQ சோதனையில் நன்றாகச் செய்யாவிடினும் உங்களில் மற்றைய திறன்கள் ஒளிந்திருக்கக்கூடும்.
மூளையின் வேறு சில சிறப்பம்சங்கள்
நாங்கள் புதுப்புது அனுபவங்களைப் பெறும்போது மூளையின் உயிரணுக்களில் புதுப்புதுத் தொடர்புகள் ஏற்படுகின்றன என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்
இது ஒரு பெட்டிக்குள் சாமான்களைப் போட்டு வைப்பது மாதிரியில்லை. பெட்டிக்குள் நாங்கள் போட்டுவைத்த சாமான்களை விட அதிகமாக வரப்போவதில்லை. போட்டு வைத்தனவற்றைத்தான் எடுக்கலாம். ஆனால் மூளைக்குள் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் அப்படியில்லை. போட்டதற்கும் அதிகமாகவே திருப்பிக் கிடைக்கும். திரும்பத் திரும்பக் கிடைக்கும்.
” Whole is greater than the sum of the parts” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, ” முழுமையாகக் கிடைப்பது நாங்கள் போட்ட சிறுசிறு பகுதிகளின் கூட்டுத் தொகையை விட அதிகமானது.”
உதாரணத்திற்கு, 4237 ஐ 8 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்? உங்களுக்கு ஒரு கணக்குக் கொடுக்கப்படுகிறது.
இது போன்ற கணக்கை நீங்கள் நிச்சயமாகச் செய்திருப்பீர்கள். இதனையும் செய்யச் சிரமப் படமாட்டீர்கள். ஆனால், இந்தக் குறிப்பிட்ட (particular) கணக்கை இதற்கு முன்பு செய்யவேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்காது. ஆகவே செய்திருக்க மாட்டீர்கள். சரியான விடையும் உங்கள் மூளைக்குள் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. ஆனாலும் ஏற்கனவே உங்கள் மூளைக்குள் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் எண்கணிதத்திற்கான சட்டங்களை வைத்து, மேற்படி பெருக்கற் கணக்கிற்கான விடையை மூளை சரியாகக் கணக்கிட்டுவிடும்.
தேவை ஏற்படும் நேரத்தில் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் தொடர்புகளை இணைத்து, கோர்த்து, வேண்டியவற்றால் நிரப்பி ஒரு புதிய பொருளைத் தரக்கூடிய ஆற்றல் மூளைக்கு உண்டு. இந்தச் செய்கை மேலும் பல புதிய தொடர்புகளை ஏற்படுத்தும், அல்லது பழைய தொடர்புகளை வலுப்படுத்தும்.
மூளையின் வெவ்வேறு பகுதிகளையும் அவை பொறுப்பாகச் செய்யும் வேலைகளைப் பற்றியும் சொல்லியிருந்தேன். மூளையின் மேற்பகுதி சிந்திக்கும் திறன் கொண்டுள்ளதையும் நடுப்பகுதியும் தண்டுப்பகுதியும் உடம்பின் ஆரோக்கியத்தைப் பேணும் கடமைகளைச் செய்வதையும் குறிப்பிட்டிருந்தேன்.
சிந்தனை செய்வதன் மூலம் மூளையின் மற்றப் பகுதிகளின் செயல்களைக் கட்டுப் படுத்த முடியுமென்று விஞ்ஞானரீதியாக 1972 ல் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுவாமி இராமா என்பவரை வைத்து அமெரிக்கன் கன்சாஸ் (Kansas) பல்கலைக்கழகத்தில் இந்தப் பரிசோதனை நடத்தப்பெற்றது. தனது உடம்பின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள வெப்பம் 5 degree வித்தியாசமேற்படக்கூடியது மாதிரிச் செய்து காட்டினார். அத்துடன் தனது இருதயத் துடிப்பையும் நிமிடத்திற்கு 12 தடவைகள்தான் அடிக்கவைத்தார். தனது உடம்பின் நிலையை மூளையைக் கொண்டு மாற்றியமைத்தார்.
இதன்மூலம் சிந்திக்கும் மூளையின் துணைகொண்டு உடம்பின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியுமென்பது நிரூபிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பல நிகழ்ச்சிகள் கூட இதனை உறுதிப்படுத்தும். உதாரணமாக, சக நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசியபடி இருக்கும் ஒருவருக்கு மணி பி.ப. 2 என்று தெரிந்தவுடன், தான் வழமையாக உணவருந்தும் நேரத்தைத் தாண்டிவிட்டேனென்று உணர்ந்ததும் உடனடியாகப் பசி வயிற்றைக் கிள்ளும். இது பசிக்கும் நேரம் வந்து விட்டதென்று அவர் நினைத்ததால் ஏற்படுவது.
பரீட்சைக் காலத்திலே சில மாணவர்களுக்கு மூக்கினூடாக இரத்தம் வரும். பரீட்சையைத் தவிர்ப்பதற்காக அவர்கள் சிந்தித்ததால் வந்த இரத்தம். கணவனுடன் மனஸ்தாபம் கொண்டுள்ள ஒரு பெண்ணுக்கு அவருடன் வெளியிலே போக விருப்பமில்லையென்றால், தலைவலி வந்துவிடும். அவர்கள் நடிக்கத் தேவையில்லை. உண்மையாகவே தலைவலி வரும்.
சிந்திப்பதன் மூலம் எங்களுக்கு நன்மை தரக்கூடிய பலன்களையும் அடையலாம்.
ஆகவே, ஆக்ககரமான சிந்தனைகள் மூலம் எப்படியாக எமக்குத் தேவைப்பட்டவற்றை நாம் அடையலாமென்பதைப் பின்பு விரிவாகப் பார்ப்போம்.
அதற்கு முன்பு மூளையின் இரண்டு பிரத்தியேகமான சிறப்பியல்களைப் பார்ப்போம்.
1. Reticular Activation System என்ற இந்த ஒழுங்கமைப்பைச் சுருக்கமாக RTS என்று அழைக்கலாம். இது செய்யும் வேலை என்னவென்று பார்ப்போம்.
எங்களைச் சுற்றி ஒரே நேரத்தில் பல மில்லியன் கணக்கான விடயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாங்கள் உணர்வது சில விடயங்கள் மாத்திரமே. உங்களைச் சுற்றி உன்னிப்பாகப் பார்த்தீர்களாயின் இது புரியும். சுவரிலே எறும்பு ஓடுகிறது. அதன் வாயில் என்னமோ தெரிகிறது. பக்கத்திலே ஒரு பல்லி பார்த்துக்கொண்டு நிற்கிறது. அந்தப் பல்லியின் வால் ஆடுகிறது. பக்கத்தில் இருப்பவர் கொட்டாவி விடுகிறார். அவருடைய ஒரு பல்லு தங்கத்தினால் ஆனது. காற்றிலே மயிர் பறக்கிறது. சாப்பாட்டு மணம் அடிக்கிறது. நாய் ஒன்று தூரத்திலே குலைக்கிறது. வாகன இரைச்சல் கேட்கிறது. மின்சார விசிறி கரகரவென்று சத்தமாயிருக்கிறது. இப்படியாக மில்லியன் கணக்கில் நடைபெறும் விடயங்களை வடிகட்டி, எமக்குத் தேவையானவற்றையே இந்த RAS எமது கவனத்திற்குக் கொண்டுவருகிறது. கோயில் திருவிழாவின் போது அந்தக் கூட்டத்திற்கும் சத்தத்திற்கும் நடுவில் தூரத்திலே தனது மகன் அழும் சத்தம் தாய்க்குக் கேட்கும். ஏனெனில் தாயின் கவனத்திற்கு அந்தச் செய்தியை அவளுடைய RAS கொண்டுவந்துவிடும்.
“ என்னுடைய எஜமானருக்கு இது தேவைதானா?”. RAS தனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்டு, ஆம் என்ற பதில் வந்தால் மாத்திரமே அந்த விடயத்தை எமக்கனுப்பி வைக்கும். ஒவ்வொருவரின் எஜமானரும் அவரவர்தான். ஆகவே எமக்குத் தேவையானவை எவையென்று RAS அமைப்புக்குப் புரியுமாறு நாங்கள் எம்மைத் தயார் செய்து வைத்திருந்தால், எம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களில் தேவையான விடயங்கள் விட்டுப் போகாமல், எம்முடைய கவனத்திற்கு வரும். ஆக்ககரமாக இந்த அமைப்பை எப்படிப் பயன்படுத்தலாமென்பதையும் விபரமாகப் பின்பு பார்ப்போம்.
2. Cybernatic Mechanism போன்றதொரு இயந்திர நுட்பம் எங்கள் மூளைக்குள் இருக்கிறது. கடலிலே போய்க்கொண்டிருக்கின்ற கப்பலை automatic ஆக ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்துவதற்கான இயந்திர நுட்பம் உள்ளது. வடக்கு நோக்கிச் செல்லவேண்டுமாயின் அதற்கான கட்டளையை இட்டுவிடலாம். கப்பல் சிப்பந்திகள் வேறொன்றும் செய்யத் தேவையில்லை. கப்பல் வடக்கு நோக்கியே போய்க்கொண்டிருக்கும். இப்போது 30 பாகையால் கிழக்கு நோக்கித் திருப்பவேண்டுமானால், முந்திய automatic கட்டளை இருக்கும்போதே, கப்பல் கப்டன் சுக்கானைப் பாவித்து விரும்பிய திசையில் திருப்பலாம். இரண்டு கட்டளைகளும் இருக்கும்போது சுக்கானுக்குத்தான் முதல் மரியாதை. ஆனால் சுக்கானிலிருந்து கையை எடுத்தவுடன் கப்பல் தானாகவே குறிக்கப்பட்ட automatic திசைக்குத் திரும்பிவிடும். நிரந்தரமாக வேறு திசைக்கு மாற்றவேண்டுமாயின், முந்திய automatic கட்டளையை மாற்றிடவேண்டும். இதிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னுமொரு விடயமென்னவென்றால், automatic கட்டளையும் சுக்கான் மூலம் மற்றுமொரு கட்டளையும் ஒரே நேரத்தில் இருக்கும்போது, இரு வெவ்வேறான கட்டளைகளுக்கு உள்ளாகி அதனால் கப்பல் இயந்திரத்தில் ஒரு இறுக்கம் ஏற்பட்டு, இயந்திரத்தில் தேய்வு ஏற்படும் சாத்தியம் இருக்கிறது.
இதேபோலத்தான் மனமும். எங்களுடைய கடந்தகால வாழ்க்கை அனுபவங்களாலும், ஆசை அபிலாசைகளாலும் பல automatic கட்டளைகள் எம்முள்ளே இருக்கின்றன. சில நேரங்களில் அவற்றை மீறிச் செயல்படுகிறோம். மனத்திடத்தை (will power) நம்பி எங்களை மாற்ற முயல்வோம். ஒரே நேரத்தில் இருவேறு கட்டளைகளுக்கு உட்படும் மனம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. அத்தோடு மாறுவதற்கு எடுக்கும் முயற்சி சிறிது தளர்ந்தவுடன் பழையபடி automatic நம்பிக்கைக்குத் தகுந்தது மாதிரிச் செயல்படுவோம். அடிப்படி நம்பிக்கையை மாற்றாதவரையில் மனோதிடத்தையும் விடாமுயற்சியையும் மாத்திரம் நம்பிச் செயல்படுவது தற்காலிகமான பலனையே தரும். ஆனால், அதே நேரத்தில் இரண்டு கட்டளைகளுக்கு நடுவில் ஊசலாடும் மனத்திலே சிறு சிராய்புகள் ஏற்படும் சாத்தியமுண்டு.
எங்கள் மனதிற்குள்ளே புதைந்து கிடக்கும் இந்த automatic கட்டளைகள் (நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள்…..) பற்றி விரிவாகப் பின்பு பார்ப்போம்.
Name: Sabaratnam Rajendran (commonly known as Kuttimani, Kuttimani Annaa, Kuttimani Maama depending on caller’s age)
Publishing the above book chapters by chapter in my blog:
http://asrajendran.wordpress.com