அன்புள்ள “சிவத்தம்பி” அண்ணா!....
பேராசிரியர் அல்ல நீங்கள்.

 sivathamby

அன்புள்ள “சிவத்தம்பி” அண்ணா!....
பேராசிரியர் அல்ல நீங்கள்.


உங்களின் செய்திகிடைத்து நான்கைந்துநாட்கள் கடந்து விட்டன. கனத்தையில் உங்களின் இறுதிக்கியைகளும் முடிந்துவிட்டன. நீங்களும் எங்களைவிட்டு நீணடதூரம் போய்விட்டீர்கள்!... இனிமேல் உங்களை நாங்கள் அழைக்கமுடியாது. அழைத்தாலும் எங்களின் குரல் உங்களிற்கு கேட்குமா?.... கண்ணணண்ணா (கனக)மனோண்ணா செல்வமண்ணா முத்துராஜாண்ணா என எல்லோருமே தொடர்பு கொண்டுவிட்டார்கள். எனது மனமும் பலமுறை கூறிவிட்டது. எழுது!.... எழுது!.... ஆனால் முடியவில்லை என்னால் முடியவில்லை. எங்கே தொடங்குவது?..... எங்கே முடிப்பது?..... நீங்கள் பெற்றிருந்த புலமைத்துவத்திற்கும் அதன்மூலமாக தமிழர்களிற்கும் தமிழ்மொழிக்கும் நீங்கள் காட்டிய செல்நெறிக்கும் எமக்கும் சம்மந்தமில்லை. அது உலகளாவிய உங்களின்நிலை. நீங்கள் கூறிய தமிழ்த்தேசியத்திற்கும் ஈழத்தேசியத்திற்கும் அப்பாற்பட்டது. அதனால்தான் நீங்கள் ஈழத்தைக்கடந்து இலங்கையைக் கடந்து உலகத்துஅறிஞராக பவனிவந்தீர்கள். இல்லை இந்த உலகத்தையே வலம்வந்தீர்கள். புரிந்துகொண்டோம். இதைப்பற்றி பலதடவைகள் பலபேர் எழுதிவிட்டார்கள். நீங்களும் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது இன்னும் எழுதுகின்றார்கள். நீங்கள் பார்ப்பீர்களா?..... ஆனால் உலகம் பார்க்கும்.

            “பேராசிரியர் சிவத்தம்பி” இப்படித்தான் எல்லோரும் உங்களை அழைப்பார்கள். அதற்கு மேலும் எவ்வாறு அழைப்பது?..... எமக்குத்தெரியாது!.... எது எப்படியோ நாங்கள் அப்படி அழைக்கவும் முடியாது. அவைகள்  உங்களது வகுப்பறைக்கும் மாணவர்களிற்குமானது.  கலாசாலைக்கும் சக விரிவுரையாளார்களிற்குமான உறவு அது. அவைகளிற் குள் எங்கோ ஒரு இடைவெளியுள்ளது. “அண்ணா” அல்லது “அத்தான”; அதுதான் எங்களிற்கும் உங்களிற்குமானது. இந்த உறவுமுறைக்குள் எந்த இடைவெளியும் இல்லாத நெருக்கமும் இருக்கின்றது. உரிமையும் இருக்கின்றது. வல்வெட்டித்துறை என்ற எங்கள் வீட்டிற்குள் நீங்கள் வந்தபோது இந்த உறைவத்தான் எங்களிற்கு கொடுத்தீர்கள். 1963இல் கரவெட்டி பண்டிதர் காத்திகேசுவும் அவர் மனைவி வள்ளியம்மையும் தங்கள் மகனான சிவத்தம்பிக்கு S.V.N. வீட்டில் பெண் எடுத்தபோது இந்த உறவு தொடங்கிவட்டது. அன்றிலிருந்து நீங்கள் எங்களுடையவர். புpரபலவர்த்தகரும் கரைத்தண்டையலுமான “செல்லையா விசாகப்பெருமாள் நடராசா” என்ற பெயரின் சுருக்கமே S.V.N. அதனால்தான் அவருடைய “நடராசாகோட்டம்” வல்வெட்டித்துறை உங்களின் முகவரியானது. இதற்குப்பின்பாக உலகம் தெரிந்த எங்களின் திருமுகங்களில் நீங்களும் ஒன்றானீர்கள். உங்கள் பார்வையும் பண்பும் உலகமாய்விரிந்தது ஆனால் உங்கள் காலடியை வல்வெட்டித்துறை மண்தான் தாங்கிநின்றது.

          நீங்கள் வல்வெட்டித்துறைக்கு வந்த பின்னர்தான் எங்களின் “இலக்கிய வரலாறு” எங்களிற்கே ஏற்றமாய்த் தெரிந்தது. அந்நாளில் வைத்திலிங்கப்புலவரையும் பின்னாளில் ஏகாம்பரப்புலவரையும் எங்களிற்கு காட்டியவர் நீங்கள்தான். உங்களின் பாதையில் அவை சிறுதுளிதான் ஆனால் எங்களின் பாதையில்!.... அந்தவழியில் இன்று எத்தனையோ புலவர்களையும் பல்துறைகளில் பெருமை பெற்றவர்களையும் எங்கள் இனம் எனக்கண்டு கொண்டோம்.   

                     1967 ஏப்ரல் 8ந்திகதி கரவெட்டியில் இருந்து மனைவி மற்றும் உங்களின்; குழந்தையுடன் நீங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. வர்த்தகர் சிவஞானசுந்தரம் சுடப்பட்டு விழுந்தார் என்ற சேதிகேட்டு இடையிலேயே திரும்பிய நீங்கள் உடுப்பிட்டி பெண்கள்பாடசாலை விடுதியில் இருந்து கொழும்பிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டீர்கள். இதற்குப்பின்னரே யாழ்ப்பாணத்தில் இருந்து சிரேஸ்ட பொலிஸ்அதிபர் சுந்தரலிங்கம் தலைமையிலான குழுவினர் சம்பவஇடத்திற்கு வந்திருந்தனர். இவ்வாறு அன்றைய அசம்பாவிதநிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உங்களாலான முயற்சியை ஊருக்காக செய்தீர்கள்.  உங்களின் சமூகப்பணி கல்வியில் இருந்து களத்திற்கு மாற்றமடைந்தது அன்றுதான். நீங்கள் கூறியதுபோல் அன்றையசம்பவம் உங்களின் வாழ்கையில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையின் வாழ்கையிலும் இல்லையில்லை ஈழத்தமிழர் வாழ்விலும் பெரியதிருப்புமுனையாய் மாறிப்போனது வரலாறு. அன்றிரவு நீண்டுவிடிந்த பின்பும் நீங்களும் உங்கள் அண்ணன் சிவசிதம்பரமும் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்று முழுவிசாரணைகளிற்கும் முகம் கொடுத்தீர்கள். அன்று பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய நீங்கள் அதன்பின் இலண்டன் பயணமானீர்கள். பட்டம் பெற்று நீங்கள் திரும்பிவந்தபொழுது அன்றைய இரவிற்கு விலைதேடிய எங்கள்மண் தன்னைமறந்து எங்கோ பயணத்தை தொடங்கியிருந்தது.

        குறிக்கட்டுவானிலிருந்து வந்துகொண்டிருந்த குமரகுருவிற்கு சொந்தமானலொறி மான்பாய்ந்தவெளியில் சேற்றினில் குடைசாய்ந்து விட்டது. சாரதி கிளியண்ணா எப்படியோ தப்பிவிட்டார். ஆனால் குடைசாய்ந்த லொறிக்குள்ளே முழுமையாக மீன்சிப்பங்கள். 1979 பிற்பகுதி அல்லவா இருண்டுவிட்டால் தொண்டைமானாற்றுப்பகுதியில் ஆள்நடமாட்டம் அற்றுப்போய் வீட்டின்கதவுகள் யாவும் பூட்டப்பட்டுவிடும். தகவலறிந்து வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து வந்திருந்த கண்ணனும் யூசிறியும் கவிழ்ந்திருந்த லொறியிலிருந்த சிப்பங்களை மற்றைய லொறிக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள். கப்பலிலில் பணியாற்றிவிட்டு சிலகாலம் முன்புதான் அவர்கள் ஊருக்;கு திரும்பியிருந்தார்கள். மான்பாய்ந்தவெளி அத்துவானக் காடு இருட்டு ஒருபுறம் வாகனவெளிச்சம் வந்தாலோ பாதுகாப்புபடையினரா என்றபயம் மறுபுறம். ஏனெனில் இன்பம் செல்வம் நினைவிற்கு வரும்காலம். உதவிக்கு யாருமில்லை.

       “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான்என்றான் “கண்ணன்”
ஈங்கிவனை நான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்” 


என்னும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த நீங்கள் இரவென்றும் பாராமல் சம்பவஇடத்திற்கு வந்திருந்தீர்கள். எங்களிற்கு பயம் பறந்துபோனது. நீங்களோ நிலமையைப்பார்த்தீர்கள். இவைகள் சாதாரண நிகழ்வுகளே. அடுத்தகணம் கையிலிருந்த புத்தகம் பேப்பர் மற்றும் பைல்கள் அடங்கியிருந்த பையை வீதியோரமாக வைத்துவிட்டு சப்பாத்தைக்கழட்டி விட்டு “நானும் ஒருகை தாறன்” எனக்கூறியவாறு சேற்றினில் இறங்கியிருந்தீர்கள். அன்றுதான் மிகஅருகிலிருந்து உங்களை நான் பார்த்தேன். உங்கள்குரலை நான்கேட்டேன். உங்கள்படிப்பு  பதவி செல்வாக்கு சமூகத்தில் உங்களிற்கு இருந்த அந்தஸ்து என்பவற்றை எல்லாம் வீதியோரம் வைத்த பைபோல ஒதுக்கிவிட்டு மீன்சிப்பங்களை தூக்கவென சேற்றுக்குள் இறங்கினீர்களே!.... முப்பதுவருடங்கள் கடந்தும் அந்தக்காட்சிகள் இன்னும் என்னுள் நிழலாடுகின்றன. உங்களின் நிலையை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் உங்களின் மைத்துனர்கள் “இல்லையத்தான் நீங்கள் போங்கோ நாங்கள் பார்க்கின்றோம்” எனக்கூறி உங்களைத்தடுத்தார்கள். உடனே “நீங்கள் வேலைசெய்யிறதை இப்பதான் நான் பார்க்கின்றேன்.” எனக்கூறி அந்த இடத்தைக் கலகலப்பாக்கி னீர்;களே!.... ஞானம் என்ற நண்பனுடன் எதிர்பாராமல் அவ்விடத்திற்கு நானும் வந்திருந்தேன். என்மனதில் ஆழப்பதிந்து போனது அன்றையஇரவு. உங்கள்மீது நான் நேசம் கொள்ள காரணமானது அன்றைய இரவின் அந்த நிகழ்வுதான். நான் அவ்விடத்தில் நின்றதோ உங்களின் செயலைப்பார்த்ததோ உங்களிற்;கு இன்றுவரை தெரியாது. ஏனெனின் உங்களிற்கு அப்பொழுது என்னைத்தெரியாது. இதைப்படிக்கும் போதுதான் கண்ணனும் யூசிறியும் அச்சம்பவத்தை நினைத்துப்பார்ப்பார்கள். ஞானத்தை தேடுவார்கள். உங்களின் அறிவு. உலகறிந்த விசாலமான பார்வை. இன்று எல்லோரும் எழுதுகின்றார்கள். அதற்கு அப்பால் உங்களின் எளிமை உங்களின் கருணை உங்களின் மனிதநேயம். ஆனால் அன்றே நான் உங்களைப் புரிந்துகொண்டேன். உங்களின் பக்தனானேன். ஆனால் சந்திக்க முடியவில்லை. ஏனெனின் சந்திக்கமுயலவில்லை.

           1984 ஓகஸ்ட் 4ந்திகதி இராணுவமுற்றுகை ஒரேநாளில் 515 வல்வெட்டித்துறை இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காலியிலிருந்த பூசா முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். முழு வல்வெட்டித்துறையுமே ஸ்தம்பிதமடைந்தது. அகதியாய் ஓடியோர் திரும்பிவரப் பயந்தனர். ஊரே தன்னிற்குள் தானே புதைந்துகொண்டது. ஓடாத கடிகாரமாய் வல்வெட்டித்துறை!... எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி?.... அடுத்தது என்ன?.... யாரால் என்ன செய்யமுடியும்?....... கேள்விகளே பதில்களாயின. என்னால் முடியும் மனங்கொண்டீர்கள்  எங்களிற்காக நீங்களே அன்று முன்வந்தீர்கள்.... உங்கள் முயற்சியால் “வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு” உருவாயிற்று. வரலாற்றிற்கு வழியைக்காட்டும் வல்வெட்டித்துறைக்கு அன்று நீங்கள் வழியைக்காட்டினீர்கள். உங்களின் தலைமையில் குமாரசாமிஇ முருகமூர்த்திஇ ஆடியபாதம்இ செல்வேந்திராஇ சச்சிதானந்தம் எனப்பிரஜைகள் குழு உருவாயிற்று. உங்களிற்கு உதவியாக சிவகுகதாசன் அரசரெட்ணம் புவனேஸ்வரராஜா கனகமனோகரன் என்போர் திரண்டார்கள். உள்துறைஅமைச்சு பாதுகாப்பு அமைச்சு இராணுவம் இந்தியதூதுவராலயம் வேறு வெளிநாட்டு தூதுவராலயங்கள் என இடைவிடாத சந்திப்புகள் கலந்துரையாடல்கள்  ஒவ்வொரு இரண்டு கிழமையும் பதினான்கு பேராக 475 இளைஞர்களை காலியில் இருந்து மீட்டுவந்து சாதனைபுரிந்தது உங்களின் பிரஜைகள் குழு. அதில் உங்களின் பங்கே அளவிடற்கரியது. அதற்காக எங்களின்மண் உங்களிற்கு என்றும் தலைசாய்க்கும். இதனைத்தொடர்ந்தே ஏனைய ஊர்களிலும் பிரஜைகள் குழுக்கள் உருவாக்கப்பட்டமை தனிவரலாறாகும்.

          8.4.1986 உங்களின் எங்களின் பக்திக்குரிய செல்வச் சந்நிதியானின் தேர் எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்டதேர் சின்னாபின்னமாகி சாம்பலாகி அச்சாம்பலில் மிஞ்சிய எரிதணல்கள் கரும்புகையை வீசியடித்துக் கொண்டிருந்தன. இறந்து கிடந்த இராணுவவீரர்களின் சடலங்கள் குறிபார்த்தபடி  கோபா வேசத்துடன் ஏனைய  இராணுவவீரர்கள்.  எரியுண்ட சுடுசாம்பரின் நடுவே நீங்கள் மனமுருகி வழிபடும் சன்னிதியானின் வீதியில் வெறும் கால்களுடன் நீங்கள்!... இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

        வல்வெட்டித்துறை பிரஜைகள்குழு யாழப்பாணம் பிரஜைகள்குழு எனத்தொடர்ந்த உங்களின் சேவை யுத்தநிறுத்த கண்காணிப்பாளராக மாற்றமடைந்திருந்தது. மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே சம்பவஇடத்திற்கு சென்று கண்காணிக்க வேண்டும். வடமாகாணத்தில் இருந்து கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய நீங்களும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கந்தரெத்தினம் சிவபாலன் அவர்களும் போராளிகளினாலும் அரசினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தீர்கள். ஆனால் களத்தில் நிற்ப்பவர்கள்?.... கைகளில் ஆயுதம் தரித்திருப்போர்?.... தம் உயிரை பாதுகாத்துக்கொள்ள எக்கணமும் துப்பாக்கியின் விசையை இழுத்துவிட தயாராய் நிற்பர். துப்பாக்கிச்சூடுகளின் சத்தங்கள். குண்டு வெடிக்கும் பேரோசைகள் இவைகளின் மத்தியில் உங்களின் குரல்கள் கேட்குமா?.... ஆனால் தயங்கவில்லை நீங்கள். ஓடவோ ஒளியவோ முடியாதநிலை. ஓடமுடியாத உடல்வாகு எத்தனை தடவைகள் உரசிசென்றன துப்பாக்கி குண்டுகளும் செல்த்துகள்களும் ஒரு போராளிக்குரிய திடத்துடனும் இராணுவவீரனுக்குரிய கட்டுப்பாடுகளுடனும் நீங்கள் நடத்திய கடமை தவறாத போராட்டம். ஆயுதங்களிற்கிடையில் எப்பொழுதும் நிராயுதபாணியாய் நீங்கள். ஆனால் அப்பொழுதும் நீங்கள் நிமிர்ந்தே நின்றீர்கள்!...

                   சிவத்தம்பி அண்ணா 1983 முதல் 1987 வரை கப்பலில் வேலை செய்த காலங்களில் நான் எழுதிய கவிதைகளைப்பற்றி எனது தமிழாசிரியர் தங்கவடிவேல் உங்களிடம் சிலாகித்தபோது அவைகளை அச்சிலேற்றிப் பார்க்க நீங்கள் ஆசைப்பட்டீர்கள். இந்தியஇராணுவ அடாவடித்தனத்தினால் உயிர்தப்பிய நிலையில் கனடாவில் எனது வாழ்க்கை. தந்தையாரின் முதலாவது வருட திவசத்திற்காக ஊர்வந்தபோது சத்திவடிவேல் மாஸ்டருடன் வந்து கல்வியங்காட்டில் உங்களைச்சந்தித்தேன். பதினான்கு வருடத்தின் பின் எனது ஆசை நிறைவேறியது. சிலநாட்களின் பின் இரண்டாம்முறையாக சந்திக்க வந்தபோது கொழும்பிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தீர்கள். எப்படிப்போகின்றீர்கள்?.... கேட்டேன் “கிளாலியால்தான்” என பதில் தந்தீர்கள். ஆச்சரியப்பட்ட என்னைப்பார்த்து “நானும் உங்களைப் போல் சாதாரண மனிதன்தான் எனக்கென பிரத்தியேகவசதிகள் எதுவும் வேண்டாம்” எனச் சாதாரணமாகச் சொன்னீர்கள். நீங்கள் எங்களைப்போல் சாதாரணமனிதரா?

          1996இல் உலகத்தமிழ் பண்பாட்டு மகாநாட்டிற்காக கனடா வருகின்றீர்கள் என்ற சேதி அறிந்து மனது துள்ளிக்குதித்தது. நீங்கள் வரும் தேதி அறிந்து வேலையில் விடுமுறை எடுத்து காத்திருந்தேன். வந்த அத்தினமே பவானி அக்கா வீட்டில் உங்களைச் சந்தித்தேன்.  அந்த மூன்று கிழமைகளும் எனது வாழ்வின் பொன்னானநாட்கள். நீங்கள் சென்ற பல இடங்களிற்கும் நானும் வந்தேன். இல்லை என்னையும் கூட்டிச்சென்றீர்கள். அதன்பின் இடையறாத தொலைபேசி உரையாடல்கள்.

          இப்ப......இவரோடு கதைத்துக் கொண்டிருக்கின்றேன்
என்னடாப்பா கனடாவிலை என்ன புதினம்
இப்ப சொல்லு.........இவன் என்ன செய்கின்றான்...
எனத்தொடரும் உங்களின் சிறியகேள்விகள். எனது முட்டாள்த்தனமான கேள்விகளிற்கும் பொறுமையுடன் நீங்கள் தந்த விரிவான பதில்கள் விளக்கங்கள்.

          “வல்வெட்டித்துறையின் வரலாறு” எழுதப்படவேண்டிய அவசியத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயங்களையும் அணுக வேண்டிய பெரியோர்களையும். கேட்கப்படவேண்டிய கேள்விகளையும் அல்லவா?.... விளங்கப்படுத்தினீர்கள். எங்களைப்போன்ற புத்திசாலிகளிற்கு உங்களின் விளக்கங்கள் புரியவே பலநாட்கள் சென்றன. இன்று உங்களின் வழிகாட்டலில் பலதடைகள் தாண்டிவிட்டோம். ஆனால் நீங்கள்?....

                     நீங்கள் எழுதமுனைந்த “வல்வெட்டித்துறை வரலாறு” எப்படியோ இடையில் நின்றுபோனது. காரணங்கள் பலவாகும். உங்களுடன் இணைந்திருந்த “தராக்கி” தவிர ஏனையவர்கள் எங்கே எனக்கேட்டபோது இப்ப அதுவல்ல பிரச்சனை!... நான் இனி எழுதமாட்டேன்!... நீ எழுது!... நீ எழுதுவாய்.!.... நீயே எழுதவேண்டும்!.... என ஊக்கம் கொடுத்தீர்கள். அதற்காக பலரிடமும் என்னைப்பற்றி சொன்னீர்கள். கடந்தவாரமும் இந்தியாவில் வாழும் பெரியவர் காஞ்சிஅப்பாவிடம் கதைத்தபோது கூறினார் “நான் யாருக்கும் எதுவும் கூறமாட்டேன். உனக்கென்றதால் கூறுகின்றேன். ஏனெனின் சிவத்தம்பியும் உன்னைப்பற்றி கூறியுள்ளார். என்ன நம்பிக்கை!.... அண்ணா உங்கள் நம்பிக்கை வீண்போகாது. எங்களின் பயணம் தொடரும். உங்களின் வழியில் “வல்வெட்டித்துறையின் வரலாறு” விரியும்.

          இந்த இடைப்பட்ட நாட்களில் இல்லை கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ சம்பவங்கள். எவ்வளவோ உரையாடல்கள். உங்களின் எழுபத்தைந்தாவது பிறந்தநாளிற்காக பலரும் எழுதினார்கள். நான் எப்படி எழுத?.... தயக்கமின்றி  கூறினீர்கள். “அண்ணா” என எழுது!... பேராசிரியர் என என்னை விழிக்காதே!... அதற்குப் பலர் இருக்கின்றனர். “அண்ணா” என்ற உங்கள் உரிமையை எழுது. நாங்கள் கூறும் வல்வெட்டித்துறை மண்ணிற்கும் எனக்குமான உறவை எழுது. அதற்கான எனது செயலை எழுது. ஆனால் உடனே எழுதமுடியவில்லை. நாட்கள் நகர்ந்தன. நீங்கள் சொன்ன வல்வெட்டித்துறை வரலாற்றைத்தான் நான் எழுதி வந்தேன். மன்னிக்கவும் கடந்த நாலைந்து நாட்களாக எழுதமுனைகின்றேன். முடியவில்லை. என்னடாப்பா...... என்ன சொல்லு...... இரண்டு காதுகளிலும் உங்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. எல்லோரும் கேட்கின்றார்கள்?.... சிவாஎன்ன செய்கின்றாய்?.... valvai.com என்ன செய்கின்றது. “அண்ணா” காளிதாசனிற்கு காளி கொடுத்த அருள் போல எனக்கு அருட்கடாச்சம் கொடுத்தவர் நீங்கள். பேரறிஞர்களிற்கெல்லாம் ஆசானான நீங்கள் எங்களைப்போன்ற சாதாரணமானவர்களிற்கும் செய்தவை களோ மிகஅதிகம். உங்களின் காலத்தில் வெறுமனே நாங்களும் வாழந்தோம.; என்பதற்கு அப்பால் உங்களுடன் பழகி இருக்கின்றோம். பேசி இருக்கின்றோம். ஆம் நாம் மிககொடுத்து வைத்தவர்கள். நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்க்கவில்லை. ஆனால் உங்களைப் பார்த்திருக்கின் றோம். பல்கலைக்கழகத்தின் ஒற்றைச்சுட்டியான “பேராசிரியர்” அல்ல நீங்கள்!.... நீங்களே ஒரு “பல்கலைக்கழகம்” இதனால்தான் நாங்களும் எழுதுகின்றோம்.

 கனடாவிலிருந்து
உங்களின் சிவா
11.07.2011   

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com