
அன்னையவளாம் வல்வெட்டித்துறையே
எங்களைக்காக்கும்!....
“தமிழ்நீ”பொன்.சிவகுமாரன்(24.10.2011)
அக்டோபர்.20.2011 உலகமே திரும்பி பார்த்த செய்தியாக அனைத்துலகின் செய்தி ஊடகங்களிலுமே இடம் பிடித்தது லிபியஅதிபர் கேணல் முகமட்கடாபி கிளர்ச்சி படைகளினால் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்தபல மாதங்களாக அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகளின் ஆதரவுடன் முன்னேறிவந்த கிளர்ச்சிப்படைகளின் இறுதி இலக்கே கடாபியின் மரணம்தான். உலகவல்லரசுகளிற்கு குறிப்பாக மேற்கத்தைய நாடுகளிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. கடந்த 42 வருடங்களாக அரபு மற்றும் ஆபிரிக்க உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இவரின் மறைவு உறுதியான முஸ்லிம் தலைமையை இல்லாதொழித்ததுடன் மீண்டும் இவ்வாறான தலைமை ஓன்று உருவாகுமா? என்ற கேள்வியை அம்மக்களிடையே உருவாக்கி உள்ளது. ஆரம்பத்தில் ஒடுக்கப்படும் மக்களிற்கு உறுதியுடன் ஆதரவுக்கரம் கொடுத்த இவர் தனது சொந்தநாட்டு மக்களையும் ஒடுக்கினார் என இறுதியில் குற்றம்சாட்டப்பட்டார். இவ்வாறு முரணான இரண்டு பக்கங்களிலும் ஊசலாடும் அவரைப்பற்றிய விமர்சனங்களை ஆய்வு செய்வதல்ல எமது நோக்கம். லிபியாவின் வரலாற்றிலேயே மிகநீண்டகாலம் ஆட்சியிலிருந்த அவர் தனது ஆட்சிக்காலம் முழுமையுமே தலைநகரான திரிபோலியில் இருந்தே முழுஅதிகாரத்தையும் செலுத்திவந்தார். ஆனால் பலமாதப் போராட்டத்தின் இறுதியில் இவரது மரணம் இவரது பிறந்த (சொந்த) இடமான சிரேட் (sirte) இலேயே நிகழ்ந்துள்ளது. மாடமாளிகைகளில் ஆட்சி அதிகாரங்களுடன் பலவருடகாலம் ஆண்ட அவரை இறுதியில் பாதுகாத்து நின்றது என்னவோ அவரது சொந்தஊர்தான்.
இன்றைய கடாபியின் மரணம் போன்றதே ஈராக்கின் மன்னர் சதாம் உசேனின் மரணமுமாகும். 1979 முதல் 2003 ஏப்ரல் வரை இராக்கின் சர்வாதிகாரியாக விளங்கிய இவரையும் ஏதேதோ காரணங்கள் கூறிய அமெரிக்கா தலைமையிலான நோட்டோவின் படைகள் வேட்டையாடத்தொடங்கின. பலமாதங்களின் பின் சதாமின் சொந்தநகரான தைக்கிறீட்(tikrit)இல் 13 டிசம்பர் 2003 அன்று இவர் கைதுசெய்யப்பட்டார். ஒப்ரேசன் ரெட் டவுன் (operation red dawn) என்னும் பெயரில் நடந்த தேடுதல் வேட்டையொன்றில் மண்ணிற்குள் அமைந்திருந்த சிலந்திக்கூடு போன்ற பங்கறொன்றில் மறைந்திருந்த இவர் கண்டுபிடிக்கப்பட்டார். பலகாலமாக தலைநகரான பாக்தாத்தில் இருந்து கொடிகட்டி ஆண்டஇவர் இறுதியில் தனக்கு ஆபத்து வந்தபொழுது தான் பாதுகாப்பாக இருக்க தெரிந்தெடுத்ததும் தான் பிறந்தநகரைத்தான். சமகாலத்தில் உலகவல்லரசுகளிற் கெல்லாம் தமது தலைநகரில் இருந்து சவால்விட்ட இருவருமே தமது உயிரிற்கு ஆபத்து என்றதும் ஓடிஒதுங்கியது பிறந்தமண்ணில்தான்.
12 அக்டோபர் 1988 பிற்பகல் 6.00 மணியளவில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மக்களின் முன்பாக கிட்டு விடுதலை செய்யப்பட்டார். இதற்குமுன்பாக பல மாதங்கள் இந்தியசிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டு தன்னை விடுதலை செய்யுமாறுகோரி உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். இப்போராட்ட த்தினால் ஏற்படப்போகும் பின் விளைவுகளைகண்டு அஞ்சிய இந்தியஅரசு யாழப்பாணத்திற்கு கொண்டுவந்து கிட்டுவை விடுதலை செய்யமுயன்றது. 1983 முதல் 1987 வரை யாழ்நகரத்தில் தங்கியிருந்து தனது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த கிட்டு 1985 முதல் யாழ்பிராந்திய பொறுப்பாளராகி சகல அதிகாரமும்கொண்ட யாழ்ப்பாணத்தின் முதன்மை மனிதராக விளங்கியவர். ஆனால் 1988இல் நிலமைமாறியிருந்தது. இந்திய இராணுவத்துடன் கீழ் அவர்களுடன் சேர்ந்தியங்கிய சில ஒட்டுக்குழுக்களின் பயங்கரவாதம் எங்கும் தலைவிரித்தாடியது. இந்நிலையிலேயே யாழ்நகருக்குள் அவரைக் கொண்டுசென்ற இந்தியஇராணுவம் யாழ் அரசினர் வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அவரை விடுதலை செய்யமுயன்றது.
இந்தியஅரசிடம் தன்னை விடுதலை செய்யுமாறு சிறையில் இருந்து போராடிய கிட்டு யாழ்நகரில் அவரை விடுலை செய்யமுயன்றபோது தன்னை யாரும் பொறுப்பேர்க்க வராதநிலையில் இந்தியஇராணுவத்திடம் இருந்து விடுதலையாக மறுத்தார். யாழ்ப்பாண போதனாவைத்தியசாலைப் பொறுப்பதிகாரியான “நச்சினார்கினியாரின்” அலுவலகத்தில் புகுந்து கொண்டதுடன் தன்னை வல்வெட்டித்துறையில் கொண்டுசென்று விடுமாறு இந்தியஇராணுவத்திடம் கோரிநின்றார். இறுதியில் கிட்டுவின் கோரிக்கைக்கு இணங்க அவர் வல்வெட்டித்துறையிலேயே விடுலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி Assignment Jaffna என்ற புத்தகத்தில் LT. Gen SC.Sardeshpanda குறிப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் தன்னைச்சந்தித்த சமூகத் தலைவர்கள் மற்றும் பலரும் கிட்டுவை விடுதலை செய்யமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் யாழ்நகரில் அவரை விடுதலை செய்யமுயன்றபோது யாருமே கிட்டுவை பொறுப்பெடுக்க முன்வராமை யாழ்ப்பாணமக்களின் பல்வேறுமுகங்ஙளை காட்டுவதாக குறிப்பிடுகின்றார்.
இச்சம்பவம் பற்றி பலநாட்களின் பின் அக்காலத்தில் மிகப்பிரபல்யம் வாய்ந்த பத்திரிகையாளரும் கிட்டுவின் நண்பராகவும் விளங்கிய ஒருவரிடம் கேட்டபோது அவர் “அடுத்த ஒருமணித்தியாலத்தில் ஊரடங்குச்சட்டம். எங்கும் ஒட்டுக்குழுக்கள். நாம் எப்படி கிட்டுவை பொறுப்பேர்ப்பது?. பொறுப்பெடுத்து எங்கே அவரைப்பாதுகாப்பது? என மாற்றுக்கேள்வி கேட்டு அச்சம்பவத்தை நியாயப்படுத்தினார். நியாயம்தான் அவர்கள் எங்கே வல்வெட்டித்துறையின் கிட்டுவை பாதுகாப்பது? ஆனால் ஊரடங்கு உத்தரவு அமுலாகியவேளையிலும் வல்வெட்டித்துறை ரேவடியில் ஆர்வத்துடன் திரண்டமக்கள் கிட்டுவை அகமகிழ்வுடன் வரவேற்றனர். ஆலாபித்தனர். பாதுகாத்தனர். அது அவர்களிற்கு தெரியும். ஏனெனில் கிட்டு அம்மண்ணின் மைந்தன். அவ்விடத்தில் கூடிய மக்களிற்காக சிற்றுரையொன்றையும் அவ்வேளையில் கிட்டு ஆற்றியிருந்தார். வல்வெட்டித்துறை அவனது சொந்தமண் அந்தமக்கள் அவனது உறவினர்கள் ஊரவர்கள். தனது சொந்தமண் தன்னைக்கைவிடாது என்ற கிட்டுவின் நம்பிக்கையை ஊரடங்கு வேளையிலும் அந்தமண் கைவிடவில்லை. அந்தமண் என்பதில் அங்குவாழும் மக்கள். அங்கிருக்கும் வீதிகள் ஒழுங்கைகள். வீடுகள் விளையாடும் மைதானங்கள். பாடசாலைகள். கோவில்கள். ஓயாத அலையடிக்கும் அந்தக்கடற்கரை அங்கிருக்கும் மரம் செடி கொடி ஊர்வன மற்றும் உயிர்வாழ்வன என எல்லாமே அந்தமண்தான்.
“எனக்கு ஊருக்கு போய்விடவேண்டும் போலிருக்கிறது. ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக. என்தாயையும் தந்தையையும் பழைய சிநேகிதர்களையும் பார்ப்பதற்காக. நான் எந்தநிலையில் இருக்கின்றேன் என்பதை எண்ணிப்பார்ப்பதற்காக. நான் யாரென்பதையும். எங்கிருந்து வந்தேன் என்பதையும். எங்கே போகவிரும்புகின்றேன. என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக. அங்கேதான் நான்பிறந்தேன். வளர்ந்தேன். என் வாழ்வின் முதல் இருபத்தியொரு ஆண்டுகளைக்கழித்தேன். உண்மையிலேயே அது சொந்த ஊர்தானா அடிவாங்கியிருக்கும்போது நம்மை அணைததுக்கொள்ளக்கூடிய புகலிடம்தானா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.”
1973 இல் கென்நார்ட்டனிடம் தாடையை உடைத்துக்கொண்டதுடன் தோல்வியையும் சந்தித்து ஊர்திரும்பும் குத்துச்சண்டை சாம்பியனான முகமது அலியின் எண்ணங்களே மேற்கூறப்பட்டவை. (1975 இல் வெளிவந்த “My OWN STORY” By MUHAMMAD Ali என்ற புத்தகத்திலிருந்து)
ஆளும்போதும் நன்றாய் வாழும்போதும் எல்லோரும் வருவார்கள். ஆனால் ஆளும்போதும் வாழும்போதும் மட்டுமல்ல அடிவாங்கி இருக்கும்போதும் அழும்போதும் எம்மை அரவணைக்க காத்திருப்பது அன்னையும் அன்னைமண்ணாம் வல்வை மண்ணும்தான்.