செய்திக் குறிப்பு:27

செய்திக் குறிப்பு:27
வல்வெட்டித்துறை சாராயக் கடையை மூட நகரசபை காலக்கெடு
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் அனுமதி பெறாது இயங்கி வரும் சாராய மொத்த, சில்லறை விற்பனை நிலையத்தினால் பொது மக்கள் தினமும் அசௌகரியங்களுக்காளாகி வருகின்றனர். சாராயக்கடையினுள் இருந்து குடித்துவிட்டு மதுபோதையில் வெளியே வந்து வீதியினால் போகும் மாணவிகள் மீது சேட்டைகள் விடுவதும், நகரசபை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனசாலைக்கு வெற்றுச் சாராயப் போத்தலால் எறிந்து சேதப்படுத்தியும் வரும் குடிகாரர்களுக்கு எதிராகவும், சாராயக் கடை உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சாராயக் குதத்தை மூடிவிட வேண்டும் என்றும் அந்தப் பிரதேசப் பொது மக்களும், மாணவர்களும் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் நகராட்சி மன்றத்தில் சாராயக் குதத்தை மக்கள் நடமாட்டம் செறிவாக உள்ள பகுதியில் இருந்து அகற்றி மூடிவிடவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி இது தொடர்பாக சாராயக் கடை உரிமையாளருக்கு எழுத்து மூலமும், நேரிலும் அறிவித்தும் அதனை அவர் அகற்ற மறுத்து வருவதால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக நகராட்சி மன்றத்தின் தலைவர் நடராஜா அனந்தராஜ் கவலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில் “சாராய அனுமதி வழங்கும் திணைக்களங்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மக்கள் நலன்பேணும் நடவடிக்கையிலும், இளைஞர்களின் ஒழுக்கம் மற்றும் கலாசாரத்தைப் பேணும் வகையிலும் இதய சுத்தியுடன் செயற்படவேண்டும். அவ்வாறில்லாவிடில் இத்தகைய ஒழுங்கீனங்களையும் சட்டவிரோத விற்பனை நிலையங்களையும் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலமே கட்டுப்படுத்தமுடியும்” என்று தெரிவித்ததுடன் சாராயக் கடை உரிமையாளருக்கு அதனை முடிவிடுவதற்காக பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.